ஆத்திரேலிய முன்னாள் அணித்தலைவர் ரிக்கி பாண்டிங் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்

விக்கிசெய்தி இலிருந்து

புதன், பெப்பிரவரி 22, 2012

ஆத்திரேலிய ஒருநாள் அணியிலிருந்து நீக்கப்பட்டதால் அதிருப்தியடைந்த முன்னாள் அணித்தலைவர் ரிக்கி பாண்டிங் பன்னாட்டு ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்துள்ளார்.


ரிக்கி பொண்டிங்

தற்போது ஆத்திரேலியாவில் இந்தியா, இலங்கை, ஆத்திரேலிய துடுப்பாட்ட அணிகளுக்கு இடையே நடந்து வரும் முத்தரப்பு ஒரு நாள் போட்டித் தொடரில் ரிக்கி பாண்டிங் இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிராக எந்த ஒரு ஆட்டத்திலும் சரியாக விளையாடவில்லை என்பதால் அதிருப்தி அடைந்த ஆத்திரேலியத் துடுப்பாட்ட வாரியம், அடுத்து வரும் போட்டிகளிலிருந்து நீக்க முடிவெடுத்தது. இது ரிக்கி பாண்டிங்குக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதையடுத்து ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்து விட்டார்.


ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆத்திரேலிய அணி 2003 மற்றும் 2007ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் சிறப்பாக பங்கேற்று கோப்பையை வென்றது. ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்துள்ளவர்களின் பட்டியலில் சச்சினுக்கு (457 போட்டி, 18,179 ஓட்டங்கள்) அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார். 375 ஒரு நாள் போட்டிகளில் 13,704 ஓட்டங்களையும் (30 சதம்), 162 தேர்வுப் போட்டிகளில் 13, 200 ஓட்டங்களைம் (41 சதம்) எடுத்துள்ளார்.


இதுகுறித்து சிட்னியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாண்டிங் கூறுகையில், ஒருநாள் போட்டிக்கான அணியில் இருந்து என்னை நீக்கியது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் இதை ஏற்றுக் கொள்கிறேன். கடந்த 5 ஆட்டத்தில் எனது ஆட்டம் மோசமாக இருந்ததால் எந்த வித உத்தரவாதமும் இருக்காது என்றே நினைத்தேன். தேர்வுக்குழுத் தலைவர் என்னிடம் தெளிவாக கூறிவிட்டார். ஒருநாள் போட்டியில் இனி விளையாடுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. எனது ஒரு நாள் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்தது. இதனால் ஓய்வு பெறுகிறேன். ஆனால் தேர்வுப் போட்டிகளிலும், டாஸ்மேனியா அணிக்காகவும் தொடர்ந்து ஆடுவேன் என்றார்.


இது குறித்து ஆத்திரேலிய தேர்வுக்குழு தலைவர் ஜான் இன்வராரிட்டி கூறுகையில், "முத்தரப்பு ஒருநாள் தொடரில் தயார் இல்லாத காரணத்தால் பாண்டிங் நீக்கப்பட்டார். இவர் இல்லாத நிலையில் பழைய ஆத்திரேலிய அணியை காண முடியாது. தலைசிறந்த வீரர்களை நீக்குவது விளையாட்டில் சகஜம். ஒருநாள் போட்டிகளில் பாண்டிங் மிகச் சிறந்த வீரர். இதற்கு அவர் நிகழ்த்தியுள்ள சாதனைகளே சான்று. அணிக்கு இரு முறை உலக கோப்பை வென்று தந்துள்ளார். துடுப்பாட்டம் மட்டுமல்லாமல் களத்தடுப்பிலும் அசத்தக் கூடியவர். கடந்த போட்டியில் கிளார்க் இல்லாத நிலையில், அணியின் நலன் கருதி தலைவர் பதவியை ஏற்றார். இது இவரது சுயநலமற்ற அணுகுமுறைக்கு நல்ல உதாரணம். இவர் தேர்வுப் போட்டியில் தொடர்ந்து விளையாடுவார் என நம்புகிறோம். ஆனாலும், இவருக்கு இடம் உறுதி என்று உத்தரவாதம் எதுவும் அளிக்க முடியாது. தனது எதிர்காலம் குறித்து குடும்ப உறுப்பினர்களிடம் விவாதித்து, இன்னும் இரண்டு அல்லது 3 தினங்களில் பத்திரிகையாளர் சந்திப்பில், தனது முடிவை அறிவிப்பார், என்றார்.


ரிக்கி பாண்டிங் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் தலைமைப் பதவியில் இருந்து விலகியிருந்தார்.


மூலம்[தொகு]