உள்ளடக்கத்துக்குச் செல்

ஆப்கானில் இருந்து 33,000 அமெரிக்கப் படைகள் 2012 இற்குள் திரும்பும், ஒபாமா அறிவிப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சூன் 24, 2011

ஆப்கானித்தானில் இருந்து 10,000 அமெரிக்கப் படையினர் இந்த ஆண்டு இறுதியில் வெளியேறுவர் என்றும், 2012 ஆம் ஆண்டு கோடை காலத்திற்கு முன்பு மேலும் 23,000 பேர் வெளியேறுவர் என்றும் அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.


ஆப்கானித்தானில் இருக்கும் வெளிநாட்டு படைகள் வரும் 2014 ஆம் ஆண்டு முழுமையாக வெளியேறவுள்ள நிலையில், இந்த விசேட அறிவிப்பை வெள்ளை மாளிகையிலிருந்து நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய தொலைக்காட்சி, வானொலி உரையில் பராக் ஒபாமா வெளியிட்டார். "ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிராகத் தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் இது ஆரம்பம்தான், முடிவல்ல. ஆப்கானித்தானில் தலையிட்டதன் மூலம் நமக்குக் கிடைத்த நன்மைகளை அப்படியே தக்கவைத்துக் கொள்ள நாம் முயற்சி செய்ய வேண்டும். நம்முடைய துருப்புகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு தங்கள் நாட்டை பாதுகாக்கும் பொறுப்பை ஆப்கானித்தான் ஆட்சியாளர்கள்தான் ஏற்க வேண்டும்" என்றார் ஒபாமா.


ஆப்கானித்தானில் சுமார் ஒரு இலட்சம் அமெரிக்கப் படையினர் நிலைகொண்டுள்ளனர். இதற்காக அமெரிக்க அரசு வாரம் ஒன்றுக்கு 2 பில்லியன் டொலர்களை செலவு செய்கிறது. இது குறித்து அமெரிக்கக் காங்கிரஸ் மற்றும் அந்நாட்டு மக்கள் தொடர்ந்து அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர். ஆப்கானில் இதுவரை 1500 அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டுள்ளதோடு, 12,000 பேர் காயமடைந்துள்ளனர்.


அதே வேளை, தாம் ஆலோசனை கொடுத்த கால எல்லையை விட ஒபாமா மிக வேகமாகச் செயல்படுகிறார் என அட்மிரல் மைக் மலன் என்ற அமெரிக்க உயர் இராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஆப்கானிய அதிபர் ஹமீட் கர்சாய் ஒபாமாவின் அறிக்கையை வரவேற்றுள்ளார். ஆனாலும், தாலிபான்கள் அனைத்து வெளிநாட்டூப் படையினரும் வெளியேறும் வரையில் தாம் போரிடப் போவதாகக் கூறியுள்ளனர்.


2012 நவம்பரில் நடக்கவிருக்கும் அரசுத்தலைவர் தேர்தலில் ஒபாமா மீண்டும் போட்டியிட இருக்கிறார்.


மூலம்

[தொகு]