உள்ளடக்கத்துக்குச் செல்

இசுரேலின் முன்னாள் அதிபர் பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக சிறையில் அடைக்கப்பட்டார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், திசம்பர் 7, 2011

பெண் ஒருவரைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஏழாண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற இசுரேலின் முன்னாள் அதிபர் மோசே கத்சவ் இன்று டெல் அவிவிலுள்ள மாசியாகு சிறைச்சாலைக்குச் சென்றார். சிறைக்குச் செல்லும் முன்னர் அவர் செய்தியாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், தாம் குற்றமற்றவர் என்றும், "உயிருடன் ஒரு மனிதரை" அரசு புதைக்க எத்தனிப்பதாகவும் தெரிவித்தார்.


மோசே கத்சவ்

ஓராண்டுக்கு முன்னர் இவரது குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தாலும், அவர் மேன்முறையீடு செய்திருந்தமையினால், தனது இல்லத்திலேயே இருக்க அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


66 வயதான கத்சவ் 2007 ஆம் ஆண்டில் தனது அதிபர் பதவியில் இருந்து விலகினார். 1990களில் அவர் அமைச்சராக இருந்த போது அவரது முன்னாள் பெண் ஊழியர் ஒருவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகவும், அதிபராக இருந்த காலத்தில் இரு பெண் ஊழியர்கள் மீது பாலியல் குற்றங்கள் இழைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு கடந்த ஆண்டு நவம்பரில் உச்சநீதிமன்றம் அவரைக் குற்றவாளியாகக் கண்டது.


தனது குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் குழப்ப நிலையில் இருப்பதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்ததை அடுத்து அவர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடாதிருக்கும் பொருட்டு அவரைக் கண்காணிக்க சிறப்பு பாதுகாப்பு ஊழியர் ஒருவர் சிறைச்சாலையில் பணியில் ஈடுபடுத்தப்படுவார் என சிறைச்சாலைகள் சேவை ஆணையாளர் ஆரன் பிரான்கோ தெரிவித்தார்.


மூலம்

[தொகு]