இந்தியாவின் செவ்வாய்க் கோள் திட்டத்திற்கு ரூ. 125 கோடி ஒதுக்கப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மார்ச்சு 20, 2012

இந்திய அரசு தனது 2012 நிதி ஆண்டில் செவ்வாய்க் கோள் பற்றிய ஆய்வுத் திட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட தொகையை ரூ. 10 கோடியில் இருந்து ரூ. 125 கோடியாக அதிகரித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு மொத்தமாக வழங்கும் ஒதுக்கீடு 4432 கோடி ரூபாயை எட்டியுள்ளது.


இதனால் 2016ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை நடத்தப்படவிருந்த விண்வெளி ஆய்வுகள் 2013ம் ஆண்டின் நவம்பர் திங்களில் முன்கூட்டியே மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது. இதன்படி செவ்வாய்க்கான விண்கலம் 2013 நவம்பர் 23 இல் ஏவப்படும் என்றும், இது செவ்வாயை 2014 செப்டம்பரில் அடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


விண்வெளித்திட்டம் நவீன அறிவியல் முறைமையில் மிக முக்கிய ஒரு பகுதியென இந்தியா கருதுகிறது. இத்துறையிலான முதலீடு, தொடர்புடைய அறிவியல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தை விரைவுபடுத்தும், இத்துறையில் இந்தியா பின்தங்கியிருக்க விரும்பவில்லை. தவிர, விண்வெளி துறையின் வெற்றி, மக்களின் நம்பிக்கையை ஊக்குவித்து நாட்டின் ஒற்றுமையையும் வலுப்படுத்தும் என்று இந்திய அரசு கருதுகிறது. விண்வெளியை விட, இந்தியாவின் சமூகத்தின் பல துறைகளில் மேலதிக ஒதுக்கீடு தேவைப்படுகிறது என்று விமரிசகர்கள் கூறுகின்றனர்.


அமெரிக்காவின் 4 செவ்வாய்த் திட்டங்களில் மூன்று செயலிழந்தன. உருசியாவின் அனைத்துத் திட்டங்களும் பயனளிக்கவில்லை. அண்மையில் உருசியா ஏவிய ஃபோபசு-கிரண்ட் திட்டம் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.


மூலம்[தொகு]