உள்ளடக்கத்துக்குச் செல்

இரண்டாம் உலகப்போரின் அணுகுண்டுகளுக்குத் தப்பியவர் காலமானார்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சனவரி 7, 2010


யப்பானில் இரண்டாம் உலகப் போரின் போது வீசப்பட்ட இரு அணுகுண்டுகளிலும் அகப்பட்டு அவற்றின் மூலம் ஏற்பட்ட பாதிப்புக்களில் இருந்து தப்பிப் பிழைத்தவராக அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரே நபர் யப்பானில் புற்றுநோய் காரணமாகக் காலமானார்.


இரோசிமா அணுகுண்டு வெடிப்பின் புகைமண்டலம்

சுடோமா யமாகுச்சி என்ற அந்த நபருக்கு வயது 93. 1945 ஆகஸ்ட் 6 ஆம் நாளான்று இவர் அலுவல் காரணமாக ஹிரோஷிமாவுக்கு சென்றிருந்தார்.


அன்று தான் அங்கே முதல் அணு குண்டை அமெரிக்க விமானம் வீசியது. இதில் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் உயிரிழந்தனர். இந்த குண்டு வீச்சால் பெருமளவு தீக்காயங்களுக்கு இலக்கான யாமாகுச்சி தனது வீடு இருக்கும் நாகசாக்கிக்கு அடுத்த நாள் திரும்பினார்.


ஆகஸ்ட் 9 ஆம் நாள் நாகசாக்கியில் அணு குண்டு வீசப்பட்டபோது அவர் அங்கிருந்தார். இந்த குண்டு வீச்சில் 70 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.


இரண்டு தாக்குதல்களிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் உயிர் தப்பியிருந்தனர். ஆனாலும், யமகுச்சி ஒருவரே இரண்டு இடங்களிலும் தாக்குதலுக்கு உள்ளானவர் என்று அதிகாரபூர்வமாக யப்பானிய அரசால் அங்கீகரிக்கப்பட்டவர்.


தமது கடைசிக் காலத்தில், யமகுச்சி அணுகுண்டுத் தாக்குதலில் உயிர்தப்பிய தனது அனுபவங்களைப் பற்றி பல சொற்பொழிவுகளை ஆற்றியிருந்தார். அணுவாயுதங்கள் ஒரு காலத்தில் முற்றாக அழிக்கப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

மூலம்