இரண்டாம் உலகப் போர்க் கப்பலில் பெருமளவு வெள்ளி கண்டுபிடிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், செப்டெம்பர் 27, 2011

இரண்டாம் உலகப் போரில் பங்குபற்றிய சரக்குக் கப்பல் ஒன்றின் சிதைவுகள் 200 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான பெறுமதியான வெள்ளியுடன் அத்திலாந்திக் பெருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


பிரித்தானியாவின் கொடியைக் கொண்ட எஸ்எஸ் கைர்சோப்பா என்ற இக்கப்பல் பெப்ரவரி 1941 ஆம் ஆண்டில் கால்வே என்ற அயர்லாந்துத் துறைமுகத்துக்குச் செல்லும் வழியில் செருமனியின் யு-படகினால் மூழ்கடிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து பிரித்தானியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த 412-அடி நீளமான இக்கப்பல் எரிபொருள் குறைவினால் அயர்லாந்து நோக்கித் திருப்பப்பட்டது. ஆனால் இது செருமனியின் நீர்மூழ்கியினால் கண்டுபிடிக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது. இக்கப்பலில் பயணம் செய்த 85 பேரில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார்.


இக்கப்பலின் சிதைவுகள் அயர்லாந்துக் கரைக்கப்பால் 500 கிமீ தொலைவில் 4.7 கிம்மி ஆழத்தில் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் ஒடிசி மரைன் என்ற நிறுவனத்துக்குச் சொந்தமான சுழியோடிகளே இக்கப்பல் சிதைவுகளைக் கண்டுபிடித்துள்ளனர். கப்பலில் 200 தொன் நிறையுள்ள வெள்ளி இருந்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.


அமெரிக்க அரசுடனான ஒப்பந்தத்தின் படி கப்பல் சிதைவின் பெறுமதியின் 80 விழுக்காட்டினை ($160 மில்லியன்) ஒடிசி மரைன் நிறுவனம் தனதாக்கிக் கொள்ளும்.


மூலம்[தொகு]