இராணுவத்தினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி சந்தேக நபரை அடையாளம் கண்டார்
வெள்ளி, பெப்ரவரி 26, 2010
- 17 பெப்ரவரி 2025: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது
- 17 பெப்ரவரி 2025: இலங்கை அரசு நியமித்த நிபுணர் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்த்தப்படுகிறது
- 17 பெப்ரவரி 2025: 157 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களும் நவூரு தீவுக்கு அனுப்பப்பட்டனர்
- 17 பெப்ரவரி 2025: ஈழத் தமிழ் அகதிகள் 157 பேரும் கொக்கோசுத் தீவுக்கு அழைத்து வரப்பட்டனர்
- 17 பெப்ரவரி 2025: தஞ்சமடையச் சென்ற தமிழ் அகதிகளை ஆத்திரேலியா இலங்கைக்கு திருப்பி அனுப்பியது
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் கிரான் பிரதேசத்தில் கடந்த 12ம் தேதி 8 வயது பாடசாலை மாணவியொருவர் இராணுவத்தினரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்டப்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான அடையாள அணி வகுப்பு வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற போது சந்தேக நபர்களிலொருவரை பாதிக்கப்பட்ட மாணவி அடையாளம் காட்டியுள்ளார்.
கடந்த 12 ம் திகதி குறிப்பிட்ட மாணவி பாடசாலையிலிருந்து வீடு திரும்பும் போது வழியில் நீராடிக் கொண்டிருந்த இராணுவத்தினரால் வழிமறித்து கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக திகிலிவெட்டை இராணுவ முகாமில் கடமையிலிருந்த இராணுவ சிப்பாய்கள் 6 பேர் சந்தேகத்தின் பேரில் பொலிசாரால் கைதாகி நீதிமன்ற விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்தனர்.
அடையாள அணிவகுப்பு நடைபெற்ற போது அன்றைய தினம் குறித்த முகாமில் கடமையிலிருந்த 49 இராணுவ சிப்பாய்களும் நிறுத்தப்பட்டிருந்ததாக பாதிக்கப்பட்ட மாணவி சார்பில் ஆஜரான சட்டத்தரணி பேரின்பம் பிரேம்நாத் பிபிசி தமிழோசைக்கு கூறியிருக்கின்றார்.
4 சுற்றுக்களில் நடைபெற்ற இந்த அடையாள அணிவகுப்பில் இறுதிச் சுற்றிலேயே சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டதாகவும் கூறும் அவர், குறிப்பிட்ட சந்தேக நபர்கள் 6 பேரும் தொடர்ந்தும் எதிர்வரும் மார்ச் 3 ம் திகதி வரை நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.
இராணுவக் காவல்துறையினரின் விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் சமரசிங்கா தெரிவித்தார்.
மூலம்
[தொகு]- பிபிசி தமிழோசை, பெப் 25, 2010
- Troops arrested over alleged rape, டெய்லி மிரர், பெப் 26, 2010
- மட்டு. பாடசாலை மாணவி மீது வல்லுறவு: 48 படையினர் அடையாள அணிவகுப்புக்காக நீதிமன்றில் ஆஜர், தமிழ்வின், பெப் 24, 2010