உள்ளடக்கத்துக்குச் செல்

இரு சூடான்களுக்கும் இடையே எண்ணெய் தொடர்பான உடன்பாடு எட்டப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், செப்டெம்பர் 27, 2012

சூடான், தெற்கு சூடான் நாடுகளுக்கிடையே எல்லை, மற்றும் எண்ணெய் உற்பத்தி தொடர்பாக உடன்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளதாக இரு நாட்டுப் பேச்சளர்களும் தெரிவித்துள்ளனர். இதன்படி, தெற்கு சூடானில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் சூடானுக்கூடாக ஏற்றுமதி செய்யப்படும்.


எத்தியோப்பியத் தலைநகர் அடிசு அபாபாவில் இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையே இடம்பெற்ற நான்கு நாட்கள் பேச்சுக்களில் இந்த உடன்பாடு எட்டப்பட்டது. ஆனாலும், சர்ச்சைக்குரிய பிரதேசங்கள் தொடர்பாக இன்னும் இழுபறி நிலையே நீடிப்பதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இவ்வாண்டு இரு நாடுகளுக்கும் இடையே போர் மூழும் அபாயம் இருந்து வந்தது. இரு நாடுகளும் தமக்கிடையே உடன்பாட்டுக்கு வராவிட்டால் பொருளாதாரத் தடை விதிக்கவிருப்பதாக ஐக்கிய நாடுகள் இரு நாடுகளையும் எச்சரித்திருந்தது.


சூடான் தலைவர் ஒமார் அல்-பசீர், தெற்கு சூடானியத் தலைவர் அசல்வா கீர் ஆகியோருக்கிடையே உடன்பாடு இன்று வியாழக்கிழமை கையெழுத்திடப்படவிருக்கிறது.


2011 சூலையில் தெற்கு சூடான் தனிநாடான போது சூடானின் எண்ணெய் வளப் பகுதியின் மூன்றில் இரண்டு பங்கு தெற்கு சூடானுடன் சேர்க்கப்பட்டது. எண்ணெய் சுத்திகரிப்பு, மற்றும் ஏற்றுமதி தொடர்பான பணிகளை சூடான் பொறுப்பேற்றது.


மூலம்[தொகு]