தார்பூர் போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட செர்போ சூடானில் கொல்லப்பட்டார்
- 25 ஏப்பிரல் 2013: தார்பூர் போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட செர்போ சூடானில் கொல்லப்பட்டார்
- 10 செப்டெம்பர் 2012: சூடான் இராணுவத்தினருக்கும் போராளிகளுக்கும் இடையில் மோதல், பலர் உயிரிழப்பு
- 14 ஆகத்து 2012: தார்பூர் தாக்குதலில் வங்காளதேசத்தைச் சேர்ந்த ஐநா அமைதிப்படை வீரர் உயிரிழப்பு
- 2 மார்ச்சு 2012: சூடானின் பாதுகாப்பு அமைச்சருக்கு பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது
- 9 பெப்பிரவரி 2012: தார்பூர் பிராந்திய ஆணையம் அமைக்க சூடான் முடிவு
வியாழன், ஏப்பிரல் 25, 2013
பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தால் போர்க்குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சாலெ மிகம்மது செர்போ ஜாமுஸ் என்ற போராளி சூடானில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
செர்போ ஜாமுஸ் வடக்கு தார்பூரில் கடந்த வெள்ளிஉக்கிழமை இடம்பெற்ற சண்டையில் கொல்லப்பட்டார் என அவரது பாதுகாப்புப் பிரிவினர் அறிவித்துள்ளனர். செப்டம்பர் 2007 ஆம் ஆண்டில் தார்பூரில் ஆப்பிரிக்க அமைதிப்படையினர் மீது நடத்தப்பட்ட படுகொலைத் தாக்குதல் தொடர்பாக இவர் மீதான விசாரணைகள் 2014 மே மாதத்தில் ஆரம்பமாகவிருப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தாக்குதலில் 12 ஆப்பிரிக்க ஒன்றியப் படையினர் கொல்லப்பட்டனர். இவருடன் மற்றுமொரு தார்பூர் போராளித் தலைவர் அப்தல்லா பண்டா அபக்கீர் நுரைன் என்பவரும் வழக்கை எதிர்கொண்டுள்ளார்.
இவர்கள் இருவரும் 2010 ஆம் ஆண்டில் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்திடம் சரணடைந்தார்கள். பின்னர் இவர்கள் இருவரும் நெதர்லாந்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.
கிப்ரில் இப்ராகிம் என்பவரின் தலைமையிலான நீதிக்கும் சமத்துவத்துக்குமான படைகள் என்ற போராளி இயக்கத்துடனான மோதல் ஒன்றில் செர்போ கொல்லப்பட்டார் என ஏஎஃப்பி செய்திகள் தெரிவிக்கின்றன.
தார்பூர் போர் தொடர்பாக சூடானின் அரசுத்தலைவர், இரண்டு அமைச்சர்கள், அரசுக்கு சார்பான துணை இராணுவக் குழுத் தலைவர் ஒருவர் ஆகியோர் மீதும் பன்னாட்டு நீதிமன்றத்தினால் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
சூடானின் அரபு முஸ்லிம்களுக்கு ஆதரவாக அந்நாட்டு அரசு செயல்படுவதாகக் குற்றம் சாட்டி 10 ஆண்டுகளுக்கு முன்னர் கறுப்பின ஆப்பிரிக்கர்களான தார்பூர் போராளிகள் அரசு அதிகாரிகள் மீது தாக்குதல்களைத் தொடங்கினர். அரபு முஸ்லிம் குழுவான ஜஞ்சாவீத் என்ற போராளிக் குழு கறுப்பினத்தவர்களுக்கு எதிரான இனவொழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என அவர்கள் குற்றம் சாட்டினர். இக்காலப் பகுதியில் ஏறத்தாழ 300,000 பேர் அப்பகுதியில் கொல்லப்பட்டனர். 1.4 மில்லியன் மக்கள் தமது இருப்பிடங்களை இழந்துள்ளனர்.
தார்பூர் சண்டை அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்திருந்தாலும், அரசுப் படைகளுக்கும், போராளிகளுக்கும் இடையே ஆங்காங்கே மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
மூலம்
[தொகு]- Darfur war crimes suspect rebel Jerbo 'killed in Sudan', பிபிசி, ஏப்ரல் 24, 2013
- Darfur war crimes suspect, Jerbo, killed in Sudan, நைஜீரிய கார்டியன், ஏப்ரல் 24, 2013