உள்ளடக்கத்துக்குச் செல்

சூடான் தலைவர் ஒமார் அல்-பசீர் தெற்கு சூடானுக்கு அரசு முறைப் பயணம்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, ஏப்பிரல் 12, 2013

தெற்கு சூடான் 2011 ஆம் ஆண்டில் விடுதலை அடைந்த பின்னர் முதற்தடவையாக சூடானின் அரசுத்தலைவர் ஒமார் அல்-பசீர் அரசு முறைப் பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று தெற்குத் தலைநகர் ஜூபா வந்தடைந்தார்.


பசீர் தெற்கு சூடான் அரசுத்தலைவர் சல்வா கீருடன் பிராந்தியப் பிரச்சினைகள், மற்றும் எல்லைக்கோடு வரைவது போன்ற பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவார். அத்துடன் தெற்கு சூடானில் உற்பத்தியாகும் எண்ணெயை சூடானுக்கூடாக ஏற்றுமதி செய்வதற்கு தெற்கு சூடான் செலுத்த வேண்டிய பணத்தின் அளவும் முக்கியமாக விவாதிக்கப்படும்.


தலைநகர் ஜூபாவில் அமைந்துள்ள விமான நிலையத்தில் இரு நாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட, சல்வா கீர் பசீரை நேரில் சென்று வரவேற்றார். தலைநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.


நாடு பிரிந்த போது தீர்க்கப்படாத பல பிரச்சினைகளுக்காக சென்ற ஆண்டு இரு நாடுகளுக்கிடையே போர் நிகழும் ஆபத்து இருந்தது. ஆனாலும், கடந்த மாதம் சூடானூடாக எண்ணெய் ஏற்றுமதி ஆரம்பித்ததை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே இருந்து வந்த முறுகல் நிலை சற்றுத் தணிந்தது. சூடானின் எண்ணெய் உற்பத்திப் பகுதிகளின் மூன்றில் இரண்டு பகுதிகளை நாடு பிரிந்த போது தெற்கு சூடானுடன் சேர்க்கப்பட்டது.


இராணுவ சூனிய வலயம் ஒன்றும் எல்லைப் பகுதிகளில் அமைக்கப்படவிருக்கிறது.


மூலம்

[தொகு]