இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக இரா. சம்பந்தன் மீண்டும் தெரிவு

விக்கிசெய்தி இலிருந்து
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஏனைய செய்திகள்
இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அமைவிடம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

திங்கள், மே 28, 2012

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். மட்டக்களப்பில் நடந்த கட்சியின் 14வது தேசிய மாநாட்டிலேயே இவர் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாவை சேனாதிராஜா பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


படிமம்:R Sampanthan.jpg
இரா. சம்பந்தன்

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு மட்டக்களப்பு, ஊறணியிலுள்ள அமெரிக்க மிசன் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதற்கு முன்னதாக சனிக்கிழமையன்று இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்திலேயே சம்பந்தன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நிருவாகச் செயலாளராக குலநாயகம், பொருளாளராக எஸ்.ரி.ஆர். தியாகராஜா, சிரேஷ்ட உப தலைவர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா, பேராசிரியர் சி. சிற்றம்பலம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.


இவர்களுடன், பிரதிச் செயலாளர் நாயகமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க. துரைராசசிங்கம், தொழிற்சங்கச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் பி. அரியநேத்திரன், கலாச்சாரச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சி. யோகேஸ்வரன், சட்டம் மற்றும் வெளி விவகாரங்களுக்கான செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரும் தெரிவாகினர்.


ஞாயிற்றுக்கிழமை காலையில் இடம்பெற்ற தேசிய மாநாட்டில் திரு. சம்பந்தன் உரையாற்றுகையில், "இலங்கைத் தீவின் சிறுபான்மைச் சமூகங்கள் அனைத்தும் - தமது இன, மத, பண்பாட்டு அடையாளங்களையும் பாரம்பரியங்களையும் பாதுகாக்க வேண்டுமெனில், அவர்களுக்கு இருக்கின்ற ஒரே வழி, அவர்கள் அனைவரும் தமிழ் பேசும் மக்கள் என்ற ஒரே குடையின் கீழ் ஒன்றிணைவதே ஆகும்," எனக் கூறினார். "ஒற்றையாட்சி இலங்கை என்ற அமைப்பிற்கு வெளியே, ஐக்கிய இலங்கை என்ற அரசமைப்பிற்குள், தமிழர்கள் சுயமரியாதையுடனும், தன்னிறைவுடனும் வாழத் தேவையான ஆகக்கூடிய அரசியல் அதிகாரங்களை உள்ளடக்கிய ஓர் ஆட்சியலகையே தமிழ் தேசிய இனத்தின் இறையாண்மைப் பிரச்சினைக்கான தீர்வாக நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அதேவேளை, மறுபுறமாகக் கூறினால், ஒன்றுபட்ட இலங்கைக்குள் எமக்கான உரிமைகளைப் பெறுவது சாத்தியமற்றது என்பதை நாம் உலக சமூகத்துக்கு நிரூபிக்க வேண்டும் என்றும் சம்பந்தன் கூறினார்.


முன்னதாக இம்மாநாடு நடைபெறவிருந்த மட்டக்களப்பில் உள்ள தேவநாயகம் மண்டபத்தின் மேடை முதல் நாளிரவு தீ விபத்தில் எரிந்து விட்டதால் மாநாடு அமெரிக்க மிசன் மண்டபத்திற்கு மாற்றப்பட்டது. கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் கட்சி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமிழரசுக் கட்சி மட்டக்களப்பில் தமது மாநாட்டை நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்ததாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.


மூலம்[தொகு]