உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கைத் தலைநகர் கொழும்பில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மார்ச்சு 7, 2013

காணாமல் போன தங்களது உறவினர்களை கண்டுபிடித்துக் கொடுக்கக் கோரியும், அரசால் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் காணாமல் போனோரை விடுதலை செய்யக்கோரியும் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை தமிழர்கள் நடத்தினர்.


காணாமல் போன தங்களது உற்றார் உறவினர்களை விடுதலை செய்யக் கோரியும், ஐநாவின் மனித உரிமைகள் பேரவையின் கவனத்தை ஈர்ப்பதற்குமாக நேற்று புதன்கிழமை கொழும்பில் தமிழர்கள் கலந்துகொள்ளும் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வடக்கிலிருந்து வந்த சுமார் ஆயிரம் பேரை வவுனியாவில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதே, இந்த குறைந்த எண்ணிக்கைக்குக் காரணம் என பிபிசி தெரிவித்துள்ளது.


பதினோரு பேருந்துகளில் மன்னார், மற்றும் வவுனியாவில் இருந்து கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளப் புறப்பட்ட சுமார் ஆயிரம் பேரை பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி வவுனியா காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை இரவு தடுத்து நிறுத்தினர். சிங்களப் பகுதிகளில் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்படவிருப்பதாகத் தெரிவித்தே காவல்துறையினர் இவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனை அடுத்து பேருந்துகளில் வந்தவர்கள் வவுனியா மாவட்ட செயலகம் முன்னால் ஏ-9 வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


காணாமல் போனோரின் பெற்றோர், உறவினர்கள் இலங்கை அதிகாரிகளால் வவுனியாவில் தடுத்து நிறுத்தப்பட்டமை தொடர்பாக அமெரிக்கா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. காணாமல் போன தமது உறவுகளை தேடித்தருமாறு கோரும் போராட்டத்துக்காகவே அவர்கள் வவுனியாவில் இருந்து கொழும்புக்குச் சென்றனர்; இதற்காக அவர்களை தடுத்து நிறுத்தியமை நியாயமான செயலல்ல என அமெரிக்கத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதே வேளையில், ஐக்கிய நாடுகளுக்கு எதிராகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவும் சிங்களக் கடும்போக்காளர்கள் சிலர் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.


மூலம்[தொகு]