உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கையின் "நல்லிணக்க ஆணையத்திற்கு" அமெரிக்கா ஆதரவு தெரிவிப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, மே 30, 2010

இலங்கையில் போருக்குப் பின்னர் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தைக் கொண்டுவருவதற்கு அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவினால் ஏற்படுத்தப்பட்டுள்ள "நல்லிணக்க ஆணையத்திற்கு" அமெரிக்க இராசாங்கச் செயலர் இலரி கிளின்டன் ஆதரவு தெரிவித்துள்ளார்.


அமெரிக்க இராசாங்கச் செயலர் இலரி கிளின்டன்

"நல்லிணக்க ஆணைக்குழு சம்பந்தமான விவகாரங்களை மிக நெருக்கமாக அமெரிக்கா அவதானிக்கும் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிசுடனான சந்திப்பின் போது திருமதி கிளின்டன் கூறியுள்ளார். இவ்வாணைக்குழு நம்பிக்கையை ஏற்படுத்தினாலும், இந்த ஆணையத்துக்கு போர்க்குற்றக் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான அதிகாரமும் வழங்கப்பட வேண்டுமென திருமதி கிளின்டன் கேட்டுக் கொண்டுள்ளார்.


"இந்த ஆணைக்குழுவானது ஏதாவது குறைபாடுகளைக் கொண்டுள்ளமை கண்டறியப்பட்டால் உதவியைத் தாங்கள் வரவேற்பார்கள் எனவும் இந்தக் குறைபாடுகளுக்குப் பரிகாரம் காண்பதற்கு "ஐநாவின் ஆலோசனையைப்" பெற்றுக்கொள்வார்கள் எனவும் அமைச்சர் பீரிஸ் கிளின்டனுடனான சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.


"இவ்வாணைக்குழு சுயாதீனமானதாகவும், பக்கச்சார்பற்றதாகவும் இருக்க வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது," என கிளின்டன் தெரிவித்தார்.


"இப்படியான விசாரணை ஆணையங்கள் நீதியை நிலைநாட்டுவதில் அடுத்ததுடுத்து ஆட்சியில் இருந்தவர்களும் தொடர்ந்தும் தவறிவந்துள்ளனர் . தவிர தற்போது நியமிக்கப்பட்டுள்ள ஆணையத்தின் உறுப்பினர்கள் பக்கச்சார்பின்றி செயல்படக்கூடியவர்கள் அல்ல." என்று இலங்கை அரசாங்கத்தில் முந்தைய விசாரணைக் குழுக்களின் உறுப்பினராகவும் இலங்கை அரசாங்கத்தின் ஆலோகராகவும் இருந்த எம்.சி.எம். இக்பால் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.


போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என உள்நாட்டளவிலும் சர்வதேச அளவிலும் விமர்சகர்கள் விரும்புகின்றனர்.


ஆனால் இலங்கையில் போரின் கடைசி ஏழு ஆண்டுகள் காலப் பகுதியில் இருந்து படிப்பினைகளைப் பெற்று, இன நல்லிணக்கத்துக்கான வழிவகைகளையும் ஆராய்வதற்காக எட்டு பேர் கொண்ட ஆணையத்தையே இலங்கை அரசாங்கம் அண்மையில் அமைத்துள்ளது.


'நடந்த சம்பவங்கள்' என்று குறிப்பிட்டு அந்த சம்பவங்களுக்கு தனிப்பட்ட ரீதியில் யார் பொறுப்பேற்க வேண்டும் என்பதை ஆராய்கின்ற அதிகாரம் இலங்கை நல்லிணக்க ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 'போர்க் குற்றங்கள்' என்பது இந்த ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தில் எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என பிபிசி செய்தியாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இலங்கை ஜனாதிபதி மகிந்த ராசபக்ச இந்த வாரம் அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்திருந்த ஒரு நேர்கானலில், "குற்றம் இழைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படலாம். ஆனால் பயங்கரவாதத்தை தோற்கடித்தமைக்காக எவர் ஒருவரும் தண்டிக்கப்பட மாட்டார்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.


இலங்கையில் 37-ஆண்டு கால உள்நாட்டுப் போர் கடந்த ஆண்டு மே மாதத்தில் முடிவுக்கு வந்தது. இப்போரின் போது ஒரு இலடசத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மதிப்பிட்டுள்ளது.

மூலம்

[தொகு]