இலங்கையின் அரசுத்தலைவர் தலைமை நீதிபதி சிராணி பண்டாரநாயக்காவை பதவியில் இருந்து நீக்கினார்
- 9 சூலை 2016: கிழக்கிலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008
- 4 சூன் 2016: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது
- 9 ஏப்பிரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது
- 9 ஏப்பிரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு
- 9 ஏப்பிரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்
ஞாயிறு, சனவரி 13, 2013
இலங்கையின் தலைமை நீதிபதி சிராணி பண்டாரநாயக்காவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தில் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச இன்று காலையில் கையெழுத்திட்டுள்ளதாக அரசுத்தலைவரின் ஊடகப் பேச்சாளர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை நீதியரசரை பதவி நீக்கம் செய்யும் வகையில் நாடாளுமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வாக்களித்து அங்கீகாரம் வழங்கியிருந்தது. இதனை அடுத்தே சனாதிபதி உடனடியாகவே அமுலுக்கு வரும் வகையில் இன்று பதவி நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார். இலங்கையின் அரசியலமைப்பின் 107(2) பிரிவின் பிரகாரமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத்தலைவரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அரசுத்தலைவரின் இந்த நடவடிக்கையை சிராணி பண்டாரநாயக்கா புறக்கணிக்கலாம் என அரசியல் அவதானிகள் கூறுகின்றனர். சிராணி பண்டாரநாயக்கவை பதவிநீக்கம் செய்யும் நோக்குடன் அரசாங்கம் கொண்டுவந்த கண்டனத் தீர்மானம் மீதான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை செல்லுபடியாகாது என்று இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றம் சென்ற வாரம் அறிவித்திருந்ததே இதற்குக் காரணமாகும். சிராணி பண்டாரநாயக்கா தாக்கல் செய்திருந்த 'ரிட் மனு' மீதான தீர்ப்பின் போதே நீதிமன்றம் இந்த ஆணையை பிறப்பித்திருந்தது.
நிதி மோசடி மற்றும் தொழில்சார் ஊழல்களில் ஈடுபட்டதாக தலைமை நீதிபதிக்கு எதிரான குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. சட்டவாக்கச் சபைக்கும் நீதித்துறைக்கும் இடையில் காணப்படக்கூடிய சமநிலைக்குக் களங்கம் ஏற்படுத்தக்கூடிய வகையில் பிரதம நீதிபதி தனது பதவியைப் பயன்படுத்தியமையே அவருக்கு எதிராக குற்றப்பத்திரம் கொண்டுவரக் காரணியாய் அமைந்தது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
54 வயதுடைய சிராணி பண்டாரநாயக்கா மீது 14 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. தொழில்சார் ஊழல்கள் புரிந்தமைக்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு இவரைக் குற்றவாளியாகக் கண்டது.
தலைமை நீதிபதியின் பதவி நீக்கம் இலங்கையின் அரசியலமைப்பில் ஒரு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என அவதானிகள் கருதுகின்றனர். சிராணி பண்டாரநாயக்காவுக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணித்து வருகின்றனர். அரசுத்தலைவர் நியமிக்கும் புதிய தலைமை நீதிபதியைத் தாம் அங்கீகரிக்க மாட்டோம் எனவும் வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் எச்சரித்துள்ளனர்.
பிரதம நீதியரசரை வெளியேற்றுவது தொடர்பில் அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கையினால் சர்வதேச ரீதியில் இலங்கை கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி உள்ளது. உயர்நீதிமன்ற கட்டளையையும் மீறி பிரதம நீதியரசர் மீது குற்றப் பிரேரணை மிகவும் கவலையளிப்பதாகவும், இலங்கை தனது சட்ட திட்டங்களை முறையாகக் கடைப்பிடிப்பதுடன் சனநாயகக் கோட்பாடுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா கோரியுள்ளது.
மூலம்
[தொகு]- Sri Lanka president sacks chief justice Bandaranayake, பிபிசி, சனவரி 13, 2013
- Sri Lanka president sacks chief justice, அரபு நியூஸ், சனவரி 13, 2013
- CJ receives order of removal, டெய்லிமிரர், சனவரி 13, 2013