உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கையின் தென் பகுதியில் பெரும் வெள்ளம், 8 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மே 18, 2010

இலங்கையின் தலைநகர் கொழும்பு உட்பட உட்பட தென்மேற்கு பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை நிலவிய கடும் மழையுடன் கூடிய காலநிலையால் நாட்டின் பல இடங்களிலும் 17,785 குடும்பங்கள் (75,014 நபர்கள்) பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


அத்துடன், நேற்று மாலை வரையும் கொழும்பின் பல பகுதிகளிலுமுள்ள வீதிகளில் ஏற்பட்டிருந்த வெள்ளம் முற்றாக வழிந்தோடாமல் இருந்ததாகவும் கூறப்பட்டது.


மேல் மாகாணத்தில் நேற்றுக் காலை 8 மணி தொடக்கம் நண்பகல் வரை பெய்த அடைமழை காரணமாக கொழும்பு, கம்பகா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலுள்ள பல்வேறு வீதிகளும் தாழ்ந்த பிரதேசங்களிலுள்ள மக்கள் குடியிருப்புகளும் வெள்ளத்தில் மூழ்கின. இதனால்,கொழும்பு நகரிலுள்ள பல பிரதான வீதிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தன.


கொழும்பில் ஐந்துலாம்புச்சந்தி, ஆமர்வீதி, பாடசாலை வீதி, கதிரான, திவுலம்பிட்டிய, புளூமென்டால் வீதி உட்பட பல்வேறு தாழ்ந்த பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின. தாழ்ந்த பிரதேச குடியிருப்புகளில் பல அடி உயரத்துக்கு வெள்ளம் ஏற்பட்டது.


மேலும், இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.


களுகங்கை மற்றும் அத்தகல ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால், களுத்துறை மாவட்டத்திலுள்ள பாலிந்தநுவர, புளத்சிங்கள பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

மூலம்

[தொகு]