இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கைது

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், பெப்பிரவரி 9, 2010

இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதியும், சென்ற மாதம் இடம்பெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டவருமான ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று திங்கட்கிழமை இரவு, கொழும்பில் இராணுவக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.


இலங்கைத் தலைநகரில் அவரது அலுவலகத்தில் நுழைந்த ராணுவக் காவல்துறையினர் அவரைக் கைது செய்து அழைத்துச்சென்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவரது செய்தித்தொடர்பு உதவியாளர் சேனகா டி சில்வாவும் கைது செய்யப்பட்டார்.


சரத் பொன்சேகா ராணுவக் குற்றங்களை இழைத்திருக்கிறார் என்று முதலில் அரசு தரப்பில் கூறப்பட்டது.


கைது செய்யப்பட்ட போது, சரத் பொன்சேகா பல அரசியல் தலைவர்களுடன் ஒரு சந்திப்பை நிகழ்த்திக்கொண்டிருந்தார். சரத் பொன்சேகா மிகவும் மோசமான, அருவருப்பான முறையில் இழுத்துச்செல்லப்பட்டார் என்று ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் கூறினார்.


இருவரையும் இராணுவ காவற்துறை கைது செய்து கொண்டு செல்வதை படம் எடுத்த பத்திரிகையாளர்களின் படக்கருவிகளின் மெமரி சிப்களை இராணுவத்தினர் பறித்துச் சென்றுள்ளனர்.


ராணுவக் காவல்துறை இந்த கைது குறித்து அப்போது எந்த காரணங்களையும் அவரிடம் தெரிவிக்கவில்லை என்று கூட்டத்திலிருந்த அரசியல் தலைவர்கள் கூறினர்.


போர் குற்றங்களை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

—ஜெனரல் சரத் பொன்சேகா

கைது செய்யப்படுவதற்கு முன்னர் , திங்கட்கிழமை, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் போர் குற்றங்கள் குறித்த விசாரணைகள் வருமானால் அப்போது, தான் சாட்சியம் அளிக்க தயாராக உள்ளதாக சண்டேலீடர் பத்திரிகைக்கு பேட்டியளிக்கும்போது பொன்சேகா கூறியிருந்தார்.


"எனக்கு தெரிந்தது, நான் கேள்விப்பட்டது, எனக்கு கூறப்பட்டது ஆகியவை குறித்து நான் அவசியம் வெளிப்படுத்துவேன். போர் குற்றங்களை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். உண்மைகளை சொல்லாதவர்கள் துரோகிகள். போர் குற்றங்களை செய்தவர்கள் யாரையும் நான் காப்பாற்றப் போவதில்லை", என்று தெரிவித்தார் ஜெனரல் சரத் பொன்சேகா. சரணடைந்த விடுதலைப்புலிகள் சிறிலங்கா படையினரால் படுகொலை செய்யப்பட்டார்கள் என்று கூறியதற்காக சிறிலங்கா அரசு தரப்பினால் துரோகி என்று வர்ணிக்கப்படுவது பற்றி பொன்சேகாவிடம் கேட்டபோது – “உண்மையை கூறுபவர்கள் துரோகிகள் அல்லர்” – என்று பதிலளித்துள்ளார்.


இலங்கையின் முக்கிய தலைவர்களான, ஜனாதிபதி மகிந்த, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ஆகியோர் உத்தியோகபூர்வ மற்றும் தனிப்பட்ட விஜயங்களை மேற்கொண்டு வெளிநாடு சென்றிருந்த வேளையில் சரத் பொன்சேகாவின் கைது இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிகட்ட யுத்தத்தின் போது இலங்கை அரசு போர் குற்றங்களை செய்தன என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், அமெரிக்காவும் குற்றஞ்சாட்டி வருகின்றன.

மூலம்