உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பிணையில் விடுதலை

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, மே 19, 2012

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. படையில் இருந்து தப்பி ஓடிய இராணுவ வீரர்களை சட்ட விரோதமாக பணிக்கு அமர்த்தியமை, மற்றும் அரசுக்கு எதிராக சதி செய்ய முயன்றமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிலேயே அவருக்கு நேற்றுப் பிணை வழங்கப்பட்டுள்ளது.


கொழும்பு மே நீதிமன்ற நீதிபதி சுனில் ராசபக்ச இதற்கான தீர்ப்பை வழங்கினார். மேலும் பொன்சேகா தனது கடவுச்சீட்டை நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், வெளிநாடு செல்லும் தேவை ஏற்படின் நீதிமன்ற அனுமதியை அவர் பெற வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார்.


சரத் பொன்சேகா 2010 பெப்ரவரி 8 ஆம் தேதி கொழும்பில் கைது செய்யப்பட்டிருந்தார். இலங்கை இராணுவத்திற்கு எதிராக செயற்பட்டார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. பின்னர் இராணுவத் தளவாடக் கொள்முதலில் முறைகேடு செய்ததாக அவர் மீது இராணுவ நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு 30 மாத கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது. இத்தண்டனை ஏப்ரல் 26 இல் முடிவடைந்தது.


பொன்சேகா மீது வெள்ளைக்கொடி விவகார வழக்கும் பதிவு செய்யப்பட்டு 3 ஆண்டு கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இவ்வழக்கில் இருந்து அவரை விடுவித்து அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச பொது மன்னிப்பு அளிக்க விருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


மூலம்

[தொகு]