இலங்கையில் கதிரியக்கத்தால் பாதிப்படைந்த மருத்துவருக்கு 5 மில். ரூபாய் நட்டஈடு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, ஆகத்து 1, 2010

கதிரியக்கத்தால் உடல் ஊனமுற்றதாக வழக்குத் தொடுத்திருந்த மருத்துவர் ஒருவருக்கு 5 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்க அரசு சுகாதாரத் திணைக்களத்துக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மகரகமை புற்றுநோய் சிகிச்சை நிலையத்தில் பணி புரிந்த போது தாம் கதிரியக்கத்தால் பாதிப்படைந்தததாக வசந்த குமார கமகே என்ற மருத்துவர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.


நோயாளிகளுக்கு கதிரியக்கச் சோதனை நடத்துவதற்காகத் தாம் ரால்ஸ்ட்ரன் இயந்திரம் பொருத்தப்பட்ட அறையினுள் 2001, ஏப்ரல் 5 ஆம் நாள் அம்மருத்துவர் சென்றிருந்தார். அவர் அங்கு சென்ற போது கதிரியக்க மூலம் நிலத்தில் கிடந்ததாகவும், அது குறித்துத் தனக்கு எதுவும் முன்கூட்டியே எச்சரிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். இதனையடுத்து தான் உடல், உள ரீதியாகப் பாதிப்படைந்ததாக அவர் குற்றம் சாட்டினார். தம்மால் சரிவர நடக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.


குறித்த மருத்துவர் கதிரியக்கத்தால் பாதிப்படைந்துள்ளதாக இவரைப் பரிசோதனை செய்த மருத்துவ நிபுணர்கள் பேராசிரியர் ரிஸ்வி ஷெரிஃப், ஆர். எஸ். ஜெயதிலக ஆகியோர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

மூலம்[தொகு]