உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கையில் பிரித்தானிய சுற்றுலாப் பயணியின் கொலை தொடர்பாக ஆறு பேர் மீது வழக்கு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, அக்டோபர் 18, 2013

2011 டிசம்பரில் பிரித்தானியாவைச் சேர்ந்த நிவாரணப் பணியாளர் ஒருவர் கொழும்பில் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவின் நெருங்கிய சகா ஒருவர் உட்பட ஆறு பேர் மீது வழக்குத் தாக்கலாகியுள்ளது.


செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் குராம் சேக், 32, கிறித்துமசு நாள் அன்று விடுமுறையில் இருந்த போது சுடப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும் படுகொலை செய்யப்பட்டார். மற்றும் அவருடைய நண்பி பாலியல் ரீதியாக தாக்கிக் காயப்படுத்தப்பட்டார். அம்பாந்தோட்டை, தங்காலை என்னும் இடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றது. இக்குற்றச்சாட்டுத் தொடர்பாக இலங்கையின் ஆளும் கட்சியின் உறுப்பினரும், தங்காலை பிரதேசசபை தலைவர் சம்பத் விதான பத்திரன என்பவர் உட்பட 6 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இவர்கள் அனைவரும் இன்று அடுத்த விசாரணை நாள் வரை பிணையில் விடுவிக்கப்பட்டனர்.


வழக்குப் பதிவு செய்யப்பட்டோரில் ஒருவர் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவின் மிக நெருங்கிய நண்பர் என்றும் இவர்கள் அனைவரும் மிக விரைவில் விசாரணையை எதிர் கொள்வர் எனவும் இலங்கை சட்டமா அதிபர் அலுவலக மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.


இந்த கொலை சம்பவம் இடம்பெற்று 2 ஆண்டுகளாகியும், பிரித்தானியப் பிரதமர், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உட்படப் பல அமைப்புகள் கடும் அழுத்தங்களை பிரயோகித்த போதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


இவ்வழக்கின் முக்கிய சாட்சிகள் பலரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருப்பதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து வழக்கு விசாரணைகள் தங்காலையில் இருந்து தலைநகர் கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளது.


எனினும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு பிரித்தானிய பிரதமர் செல்வதையடுத்தே குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது இலங்கையின் சட்டமா அதிபர் வழக்கை தாக்கல் செய்துள்ளார் என்று வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை சட்டமா அதிபர் திணைக்களம் மறுத்துள்ளது.


மூலம்[தொகு]