இலங்கையில் புதிய பன்னாட்டு விமானநிலையத்தை சீனா அமைக்கவிருக்கிறது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மார்ச்சு 11, 2010

தென்னிலங்கையின் இரண்டாவது பன்னாட்டு விமான நிலையம் அமைக்க சீனா இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாக வழங்கவுள்ளது.


அத்துடன் இலங்கையின் தொடருந்து சேவையைமேம்படுத்தவென மேலும் 100 மில்லியன் டொலர்களை பெய்ஜிங் வழங்கவிருப்பதாக இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.


இலங்கையின் அண்டைநாடான இந்தியாவிலுள்ள சில அதிகாரிகளோ, தமது போட்டி நாடு இவ்வாறான பொருளாதார ரீதியான உதவிகளைச் செய்வதன் மூலம் பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கை குறைக்க முயல்வதாக அஞ்சுகின்றனர்.


இலங்கையின் இரண்டாவது பன்னாட்டு விமானநிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்கான நிதியுதவிகளை சீனா வழங்குவது தொடர்பான ஒப்பந்தமொன்று இரு நாடுகளுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.


இலங்கையின் நிர்மாணத்துறை மற்றும் அபிவிருத்தித்துறைகளுடன் தொடர்புடைய மொத்தக் கடன் தொகையில் அரைவாசிக்கும் அதிகமான அளவு சீனாவிடமிருந்தே கிடைத்து வருவதாக கடந்த வாரம் இலங்கை அரசாங்கம் கூறியிருந்தது.


நாட்டின் தென் பிராந்தியத்தில் அமைக்கப்படும் இந்த விமான நிலையம் சர்வதேச விமானங்களுக்கான இரண்டாவது தளமாக திகழவுள்ளது.


அதிகரித்துவரும் இவ்வாறான பல்வேறு வேலைத்திட்டங்களுக்கும் சீனாவிடமிருந்து இருநூறு மில்லியன் டொலர்கள் வரையான நிதி கிடைக்கின்றது.


விமான நிலையத்தின் நிர்மாண வேலைகள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன. இதற்கு சற்று அயலிலேயே அம்பாந்தோட்டையில் பெருந்துறைமுகமொன்றுக்கான நிர்மாணப்பணிகளும் பெருமெடுப்பில் நடந்துவருகின்றன. இதற்கான நிதியும் சீனாவின் பாரிய கடனுதவி வழங்கும் நிறுவனமான ஏற்றுமதி இறக்குமதி வங்கியினால் வழங்கப்பட்டுள்ளது.


"இந்த இரண்டு வேலைத்திட்டங்களின் கட்டுமானப் பணிகளும் சீன அரசுக்குச் சொந்தமான நிறுவனம் ஒன்றினாலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன", என கொழும்பிலுள்ள பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


சீனாவின் இந்த நிதியுதவிகள் மூலம், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்குப் பிராந்தியத்திற்கான வீதி அபிவிருத்தி, தலைநகரில் பிரம்மாண்டமான அரங்கமொன்று, நிலக்கரி அனல்மின் ஆலைகள் என இன்னும் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.


இந்த வேலைத்திட்டங்கள் அனைத்திலுமே சீன கட்டுமான ஒப்பந்தக்காரர்களும் பெரும் எண்ணி்க்கையிலான அந்நாட்டு வேலையாட்களுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


இந்த நிலையினால் இலங்கையிலுள்ள கட்டுமானத்துறை நிறுவனங்களும் தொழிலாளர்களும் தமது வருமான வாய்ப்புகள் இழக்கப்படுவதாக கவலையடைந்துள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.


சீனாவின் வட்டி வீதம் சப்பான், மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றின் வட்டி வீதத்திலும் அதிகமாகும் என அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், சீனத் திட்டங்கள் மிக விரைவில் முடிக்கப்படுகின்றன என்று கூறப்படுகிறது.


இந்தியாவோ தன் பங்கிற்கு, இலங்கையின் தெற்கு ரயில்வே கட்டமைப்பை தரமுயர்த்துவதற்காக 70 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கவுள்ளதாக தற்போது அறிவித்துள்ளது.

மூலம்