இலங்கையில் மக்கள் விடுதலை முன்னணி மாற்றுக் குழுத் தலைவர்கள் இருவர் கடத்தப்பட்டனர்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, ஏப்பிரல் 8, 2012

மக்கள் விடுதலை முன்னணி என்ற ஜே.வி.பி. கட்சியில் இருந்து பிரிந்து சென்ற மாற்றுக் குழுவிற்கு தலைமை தாங்கியவராகக் கூறப்படும் பிரேம்குமார் குணரத்தினம் என்பவரும் அக்குழுவின் மகளிர் பிரிவு தலைவி திமுத்து ஆட்டிகல ஆகியோர் காணாமல் போயுள்ளதாக மக்கள் போராட்ட இயக்கத்தின் அரசியல் விவகார செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.


ஜே.வி.பி.யிலிருந்து அண்மையில் பிரேம்குமார் குணரத்தினம் தலைமையில் வெளியேறிய மாற்றுக் குழுவினர் "மக்கள் போராட்ட இயக்கம்" என்ற பெயரில் அமைப்பொன்றை ஆரம்பித்திருந்தனர். அத்துடன் "முன்னிலை சோசலிசக் கட்சி" என்ற பெயரில் புதிய கட்சியொன்றையும் உருவாக்கியிருந்தனர். வரும் திங்கட்கிழமை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இக்கட்சியின் முதலாவது மாநாடு நடைபெறவிருக்கிறது.


பிரேம்குமார் தலைமை தாங்கிய போதும் இவர் தலைமறைவாகவே இருந்து வந்துள்ளார். முதலாவது மாநாட்டின் போது அவர் மக்கள் முன்தோன்றுவாரெனத் தெரிவிக்கப்பட்டது. மக்கள் போராட்ட இயக்கத்தைச் சேர்ந்த லலித்குமார் வீரராஜு மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் காணாமல் போயுள்ளனர். இவர்கள் பற்றி எவ்விதத் தகவலும் இல்லை. இந்நிலையிலேயே பிரேம்குமார், கொழும்பின் புறநகர்ப் பகுதியான கிரிபத்கொடையில் தங்கியிருந்த வீட்டிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு அல்லது சனிக்கிழமை அதிகாலை பலாத்காரமாக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மக்கள் போராட்ட இயக்கத்தின் பேச்சாளர் புபுது ஜயகொட கூறினார். இயக்கத்தின் மகளிர் பிரிவுக்கும் சர்வதேச நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக இருந்த திமுது ஆட்டிகல, வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் பேருந்து ஒன்றில் வீடு நோக்கிச் சென்றதாகவும் அதன் பின்னர், தகவல்கள் எதுவும் இல்லை என்றும் உறவினர்கள் காவல்துறையிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.


காணாமல் போயுள்ள இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்படவில்லையென காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். ஆத்திரேலியக் குடியுரிமை பெற்றவரான பிரேம்குமார் குணரட்ணம் காணாமற் போனது குறித்து கொழும்பிலுள்ள ஆத்திரேலியத் தூதரகத்தில் முறையிடப்பட்டுள்ளது. பிரேம்குமாரின் சகோதரர் ரஞ்சிதம் குணரத்தினம் 1989 ஜேவிபி கிளர்ச்சியின் போது பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுப் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டார்.


மூலம்[தொகு]