இலங்கையில் மண்சரிவினால் 700 குடும்பங்கள் அவசர வெளியேற்றம்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

சனி, சனவரி 15, 2011

இலங்கையின் மலையகத்தில் அண்மைக்கால மழையினால் மண் சரிவு அச்சுறுத்தல் காணப்படும் பகுதிகளில் உள்ள 700 குடும்பங்கள் தமது இருப்பிடங்களிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் இருநூறு குடும்பங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினதும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினதும் மாவட்ட மட்ட இணைப்பாளர்கள் தெரிவித்தனர்.


மத்திய மாகாணம், இலங்கை

மழை காலத்தைத் தொடர்ந்து திடீரென வீடுகளில் வெடிப்புக்கள் ஏற்பட்டிருப்பதாகவும், அவ்வீடுகளைப் பார்வையிடும் பணியில் தேசிய கட்டட ஆய்வு நிறுவனத்தின் பூகற்பவியலாளர்கள் ஈடுபட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கண்டி மாவட்ட இணைப்பாளர் மேஜர் எச். ஆர். கே. பி. ஹேரத் கூறினார்.


இவ்வீடுகளில் வசித்து வருபவர்களில் 134 குடும்பங்களைச் சேர்ந்த 503 பேர் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் 9 நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றனர். ஏனையவர்கள் நண்பர்கள்இ உறவினர்களது வீடுகளில் தங்கியுள்ளனர். அவர்களுக்குத் தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.


இதேநேரம் மாத்தளை மாவட்டத்தின் ரத்தோட்டப் பிரதேசத்திலிருந்து மண்சரிவு அச்சுறுத்தல் காரணமாக முப்பது குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்களில் இருந்து 30 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றப்பட்டிருப்பதாக பூகற்பவியலாளர் லக்சிறி இந்திரதிலக்க குறிப்பிட்டார்.


மூலம்

Bookmark-new.svg