உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கையில் மீண்டும் மழை, மண்சரிவு, மூவர் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், பெப்பிரவரி 3, 2011

இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம், மண் சரிவு காரணமாக மூவர் உயிரிழந்திருப்பதாகவும், இருவர் காணாமல் போயுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.


வட, கிழக்குப் பகுதியில் பெரு வெள்ளம் ஏற்பட்டு 44 பேர் உயிரிழந்த அவலம் ஏற்பட்டு சில வாரங்களில் மீண்டும் வெள்ள அபாயம் தலைதூக்கியுள்ளது.


இலங்கைக்கு அருகில் தென் கிழக்கில் ஏற்பட்டிருக்கும் தாழமுக்க நிலையே இக்காலநிலைக்குக் காரணம் எனவும், கிழக்கு, தென்கிழக்கு, மன்னார் குடாக்கடல் பரப்புக்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இக்கடற்பரப்புக்களில் கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.


வவுனியா மாவட்டத்தில் 29,500 பேர் வரை 30க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி நேற்றுத் தெரிவித்தார்.


இலங்கையின் காலநிலையில் மீண்டும் திடீரென மாற்றம் ஏற்பட்டிருப்பதால் அடுத்துவரும் இரண்டு, மூன்று நாட்களுக்கு மப்பும், மந்தாரத்துடன் கூடிய மழைக் காலநிலை நீடிக்கும் என வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் சமிந்திர டி சில்வா தெரிவித்தார்.


இவை இவ்வாறிருக்க அடை மழை காரணமாக நாட்டிலுள்ள 59 பிரதான குளங்களில் 58 குளங்கள் நிரம்பி வழிவதுடன், வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன என்று நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்வள முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன கூறினார். அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, மன்னார், பதுளை, குருநாகல், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை, மொனறாகலை, அநுராதபுரம், ஆகிய மாவட்டங்களிலுள்ள சகல குளங்களும் நிரம்பி வழிவதாகவும், 22 குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டு மேலதிக நீர்வெளியேற்றப்படுவதாகவும் அவர் கூறினார்.


கிழக்கு மாகாணத்தின் பிரதான நீர் தேக்கமான சேனநாயக்க சமுத்திரம் மற்றும் பிரதான நீர் பாசன குளங்களில் நீர்மட்டம உயர்ந்துள்ளது. இதன் காரணமாக சேனநாயக்க சமுத்திரம் மற்றும் இதர நீர்பாசனக் குளங்களிலுள்ள வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதால் வீதிகளில் வெள்ளம் பாய்கிறது என்று அங்கிருக்கும் பிபிசி செய்தியாளர் கூறுகிறார். 16 ஆண்டுகளுக்கு பிறகு சேனநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், அம்பாறை மாவட்டத்தின் தாழ்ந்த பகுதிகளிலுள்ள மக்கள் விழிப்புடன் இருக்குமாறு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்ததால் அங்கு பகலுடன் பாடசாலைகள் மூடப்பட்டன.


மூலம்

[தொகு]