உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை ஏழாயிரத்துக்கும் அதிகம் என மதிப்பீடு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, செப்டெம்பர் 3, 2011

இலங்கையில் முதற் தடவையாக இடம்பெற்ற யானைகளின் கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி நாட்டில் யானைகள் கணிசமான அளவில் உள்லதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இலங்கை யானைகள்
கண்டி எசல பண்டிகையில்

மொத்தம் 7,379 யானைகள் உள்ளதாகவும், இவற்றில் 5,879 யானைகள் தேசிய வனங்களிலும் சரணாலயங்களிலும் ஏனைய 1,500 யானைகள் காட்டுப் பகுதிகளில் காணப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.


மூன்று நாள் கணக்கெடுப்பு கடந்த ஆகத்து 11 இல் ஆரம்பமாகியது. அனைஅத்து யானைகளும் வயது மற்றும் பால் வாரியாக வகைப்படுத்தப்பட்டன. 3,500 பேர் இக்கணக்கெடுப்பில் கலந்து கொண்டனர். மொத்தம் 1,533 கணக்கெடுப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன.


ஆசியக் கண்டத்திலேயே அதி உயர் காட்டு யானை அடர்த்தி கொண்ட நாடு இலங்கை என கமநல சேவைகள் மற்றும் வன விலங்கு அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார். இந்த மதிப்பீட்டின்படி 1,107 குட்டியானைகளும் 122 கொம்பன் யானைகளும் உள்ளன. மகாவலிப் பகுதியிலேயே கூடிய எண்ணிக்கையில் 1,751 யானைகள் செறிந்து காணப்படுவதாக புள்ளிவிபரங்கள் காட்டியுள்ளன. மத்திய பகுதியில் 47 யானைகளும், கிழக்கில் 1,573 யானைகளும் வடக்கு, கிழக்கில் 1,189 யானைகளும் தெற்கில் 1,086 யானைகளும் உள்ளதாக இந்த ஆய்வு காட்டியுள்ளது.

யானைகளை பௌத்தக் கோயில்களில் வளர்ப்பதற்காகவே இந்த தொகை மதிப்பீடு செய்யப்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர். இதனை மறுத்துள்ள அமைச்சர் ஏதோ காரணத்தால் தனித்து நிற்கும் யானைளகளும் பின்னவெல சரணாலயத்திலிருந்து தெரிவு செய்யப்படும் யானைகளும் மட்டும்தான் கோவில்களுக்கு கொடுக்கப்படும எனவும் வேறு எந்த யானையும் காட்டிலிருந்து பிடிக்கப்பட்டு வளர்ப்புக்காக கொடுக்கப்படமாட்டாது எனவும் கூறினார்.


விவசாய நிலங்களை அழிக்கும் யானைகள் ஆண்டு தோறும் 200 வரையில் சுட்டுக் கொல்லப்படுகின்றன. அதே வேளையில் யானைகளால் தாக்கப்பட்டு ஆண்டுதோறும் 50 பேர் வரையில் இறக்கிறார்கள்.


மூலம்

[தொகு]