உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கையைச் சேர்ந்த 30 புகலிடக் கோரிக்கையாளர்களை ஆத்திரேலியா நவூருக்கு அனுப்பியது

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, செப்டெம்பர் 14, 2012

கிறித்துமசுத் தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த 30 ஆண்கள் இன்று காலை சிறப்பு விமானம் மூலம் பசிபிக்கின் மிகச் சிறிய தீவான நவூருக்கு அனுப்பப்பட்டனர். இவர்கள் அனைவரும் படகுகள் மூலம் ஆத்திரேலியாக் கடற்பரப்பினுள் நுழைந்து புகலிடம் கோரியவர்கள் ஆவர்.


பசிபிக் பெருங்கடலில் நவூரு தீவு

ஆத்திரேலியாவுக்கு வெளியே வைத்து விசாரிப்பதற்காக அங்கு அடைக்கலம் கோருவோரில் நவூருவுக்கு அனுப்பி வைக்க ஆத்திரேலிய நாடாளுமன்றம் கடந்த மாதம் ஒப்புதல் வழங்கியிருந்தது. நவூருவில் ஏற்கனவே இருந்த அகதிகளுக்கான தடுப்பு முகாம் 2008 ஆம் ஆண்டில் அப்போதைய தொழிற்கட்சிப் பிரதமராக இருந்த கெவின் ரட்டின் அரசினால் மூடப்பட்டது.


நவூரு அரசுப் பேச்சாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், இந்த 30 பேரும் விமான நிலையத்தில் இருந்து தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள தங்கு கூடாரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை இரட்சணிய சேனையினர் அங்கு வைத்துப் பொறுப்பேற்றதாகவும் தெரிவித்தார்.


"முதற் தொகுதியில் சில "நடைமுறைக் காரணங்களுக்காக" ஆண்கள் இடம்பெற்றுள்ளனர், அடுத்த தொகுதியில் பெண்கள், குழந்தைகளும் இடம்பெறுவர்," என ஆத்திரேலியக் குடிவரவுத் துறை அமைச்சர் கிறிசு போவன் தெரிவித்தார். "எமது செய்தி மிகத் தெளிவாக உள்ளது: நீங்கள் ஆத்திரேலியாவுக்குள் படகில் வந்தால், உடனடியாக வேறொரு நாட்டுக்கு உங்களை விமானம் மூலம் கூட்டிச் சென்று அங்கு வைத்து விசாரிக்கப்படுவீர்கள்," என கிறிஸ் போவ்சன் தெரிவித்தார். ஒருவர் எவ்வளவு காலம் நவூருவில் தங்க நேரிடும் என்பது தீர்மானிக்கப்படவில்லை. அவர்களது விண்ணப்பங்கள் முழுமையாகப் பரிசீலிக்கப்படும் வரை அங்கு தங்கியிருப்பார்கள் என அவர் தெரிவித்தார்.


நவூருவில் வைத்து புகலிடக் கோரிக்கையாளர்களை விசாரிப்பதற்கு அடுத்த 4 ஆண்டுகளுக்கு 1.4 பில்லிய ஆத்திரேலிய டொலர்களை ஆத்திரேலியா செலவழிக்கவிருக்கிறது.


நவூருவுக்கு அனுப்பப்படுவோரின் பாதுகாப்பு, மற்றும் சட்ட ஆலோசனைக்கான வழிமுறைகள் குறித்து ஆத்திரேலிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் கிலியன் டிரிக்சு ஆழ்ந்த கரிசனை தெரிவித்துள்ளார். சட்ட ஆலோசனைகள் தேவைப்படுவோருக்கு அங்கு வசதிகள் உள்ளனவா என்பது தெளிவாகத் தெரியவில்லை என அவர் தெரிவித்தார்.


புகலிடக் கோரிக்கையாளர்கள் வெளிநாடொன்றுக்கு அனுப்பபடுவார்கள் என ஆத்திரேலிய அரசு அறிவித்த நாளில் இருந்து இதுவரையில் கிட்டத்தட்ட 2100 இற்கும் அதிகமானோர் படகுகள் மூலம் ஆத்திரேலியக் கடற்பரப்பினுள் வந்திருக்கின்றனர். பப்புவா நியூ கினியின் மானுசு தீவிலும் தடுப்பு முகாம் ஒன்றை விரைவில் நிறுவுவதற்கு ஆத்திரேலிய அரசு அந்நாட்டு அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.


மூலம்[தொகு]