இலங்கை-இந்தியப் பயணிகள் கப்பல் சேவைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் எட்டப்பட்டது

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

சனி, ஜனவரி 8, 2011

போர்ச்சூழல் காரணமாக கடந்த 30 ஆண்டு காலம் இடை நிறுத்தப்பட்ட பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் இலங்கையும் இந்தியாவும் கடந்த நேற்று வெள்ளிக்கிழமை கையொப்பமிட்டன. சேவை ஆரம்பிக்கப்படுவதற்கான காலவரையறைகள் குறித்துத் தீர்மானிகாவிட்டாலும் விரைவில் ஆரம்பிக்கப்படும் என இரு நாடுகளும் தெரிவித்தன.


"இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் புதிய பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இது இரு நாடுகளுக்குமிடையிலான பாரம்பரிய தொடர்புகளை மீளமைக்க வகை செய்யும்" என இரு நாடுகளும் கூட்டாக அறிக்கையிட்டுள்ளன.


இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச முன்னிலையில் அலரி மாளிகையில் கையெழுத்திடப்பட்ட இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையில், இந்தியாவின் சார்பில் அந்நாட்டின் தூதர் அசோக் கே. காந்தா, இலங்கை சார்பில் துறைமுகங்கள், பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர் சுஜாதா குரே ஆகியோர் கையெழுத்திட்டனர்.


கொழும்பு, தூத்துக்குடிக்கிடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கிழமைக்கு மூன்று தடவைகள் நடத்தப்படும். இச்சேவையில் ஒரு தடவைக்கு ஐநூறு பயணிகள் பயணம் செய்யலாம். அத்தோடு ஒரு பயணி நூறு கிலோகிராம் பொருட்களை எடுத்து செல்லுவதற்கும் இவ்வுடன்படிக்கையின் கீழ் வசதியளிக்கப்பட்டுள்ளது.


முன்னர் கொழும்புக்கும் தூத்துக்குடிக்குமிடையிலும், தலைமன்னாருக்கும் இரமேசுவரத்துக்குமிடையிலுமாக இரு சேவைகள் இடம்பெற்றுவந்தன. 1982 இல் உள்நாட்டுப் போர் காரணமாக இவை இடைநிறுத்தப்பட்டிருந்தன.


மூலம்[தொகு]

Bookmark-new.svg