உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை அதிபர் தேர்தலில் கண்காணிப்பு பணிகளுக்காக வரமுடியாது என ஐநா அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சனவரி 7, 2010


ஜனவரி இறுதியில் இலங்கையில் இடம்பெறவிருக்கும் அரசுத் தலைவர் தேர்தலின் போது கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் பொருட்டு அங்கு வருகை தர சந்தர்ப்பம் இல்லை என ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.


இது தொடர்பில் ஐநா பேச்சாளர் மார்ட்டின் நெசீர்ஸ்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்கான தமது குழுவினரை இலங்கைக்கு அனுப்புவதற்கான போதிய கால அவகாசம் இல்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.


தமது சபையின் சட்டதிட்டத்தின் படி, கண்காணிப்பு குழுவை எந்தவொரு நாட்டுக்கும் அனுப்புவதாயின் சபையின் ஏதாவது அமர்வுகளில் அதற்கான அனுமதியை பெறவேண்டும்.


இவ்வாறான நிலையில், இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கண்காணிப்பு பணிகளுக்கு தமது குழுவினரை அனுப்புவது தொடர்பில், அமர்வுகளில் அனுமதியை பெறுவதற்கு போதுமான காலஅவகாசம் இல்லை என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இதனிடையே, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்துவதன் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள உள்ளதாக தேர்தல்கள் செயலகம் முன்னர் அறிவித்திருந்தது.

மூலம்

[தொகு]