இலங்கை அரசுத்தலைவர் ராஜபக்சவுக்கு அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சூன் 19, 2011

இலங்கையில் இடம்பெற்ற சட்டத்துக்கு புறம்பான ஆறு படுகொலைச் சம்பவங்கள் குறித்து வாசிங்டனில் உள்ள நடுவண் மாவட்ட நீதிமன்றம் ஒன்று இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பாணை விடுத்துள்ளது.


இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச

சித்திரவதையினால் பாதிக்கப்படுவோரைப் பாதுகாக்கும் அமெரிக்க சட்டத்தின் கீழ் இலங்கையில் மூன்று வெவ்வேறு சம்பவங்களில் கொல்லப்பட்ட சிலரின் உறவினர்களால் ராஜபக்சவிடம் 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நட்டஈடு கோரி இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஹேக் உடன்படிக்கையின் கீழ் இந்த அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்ட நாடுகளில் அமெரிக்காவும் இலங்கையும் அடங்குகின்றன.


இந்த அழைப்பாணை அரசுத்தலைவர் வசிக்கும் அலரி மாளிகைக்கு முதலில் அனுப்பப்பட்டது என்றும் ஆனால் அதனை ஏற்க அவர் மறுத்து விட்டதையடுத்து நீதி அமைச்சு அதைப் பெற்றுக் கொண்டது என்றும் நீதியமைச்சின் செயலர் சுஹத கம்லத் தெரிவித்துள்ளார். அதே நேரம் இதுபோன்ற அழைப்பாணைகளுக்கு பதிலளிக்க வேண்டியதில்லை என்றும், தமது சட்ட நிலைப்பாடு தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்துக்குத் தகவல் தெரிவிக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.


2006 ஆம் ஆண்டு இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் மூதூர் பகுதியில் கொல்லப்பட்ட மாணவர் ரஜிகர் மனோகரன், மற்றும் ஆனந்தராஜா , ரி. தவராஜா ஆகியோரின் உறவினர்கள் இவ்வழக்கை தாக்கல் செய்திருந்தனர். ரஜிகர் 2006 சனவரி மாதம் கொல்லப்பட்ட மாணவர்களில் ஒருவர். ஆனந்தராஜா 2006 சூன் மாதம் மூதூரில் கொல்லப்பட்ட அக்சன் பாம் நிறுவனத்தின் ஊழியர்கள் 17 பேரில் ஒருவர். ரி.தேவராஜாவின் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் 2009 இல் இறுதிக்கட்டப் போரில் மோதல் தவிர்ப்பு வலயத்திலிருந்த பதுங்கு குழியொன்றில் வீழ்ந்த எறிகணையினால் கொல்லப்பட்டனர்.


இலங்கையில் நீதிக்குப் புறம்பான கொலைகளால் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வழக்குத் தொடுநர்கள் தெரிவித்துள்ளனர். மகிந்த ராஜபக்ச இலங்கையின் முப்படைகளின் தலைவர் என்ற முறையில் இவ்வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார். இனவழிப்புக்கு எதிரான தமிழர்கள் என்ற அமைப்பின் அனுசரணையுடன் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


அமெரிக்காவின் முன்னாள் உதவி பிரதி சட்டமா அதிபர் புரூஸ் பெயின் கடந்த சனவரி 28 ஆம் திகதி இம்மனுக்களைத் தாக்கல் செய்திருந்தார். "சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கான சட்டம் அமெரிக்காவில் உள்லது. இதன் அடிப்படையில் குற்றவாளிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர், அவரிடம் நட்டஈடு கோரி வழக்கைத் தாக்கல் செய்ய முடியும். இதன் அடிப்படையிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் கீழ் ஜனாதிபதிக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது," என புரூஸ் ஃபெயின் தெரிவித்ததாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.


"இலங்கை அரசுத்தலைவர் இந்த அழைப்பாணைக்குப் பதிலளிக்காவிட்டால், அவருக்கு எதிராகத் தீர்ப்பு ஒன்றை நீதிமன்றம் வழங்கும் என்றும், அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டஈட்டுக்கு உத்தரவிடப்பட்டால், அவருக்கு அமெரிக்காவிலோ அல்லது இலங்கைக்கு வெளியே வேறு நாடுகளிலோ இருக்கக்கூடிய சொத்துக்களைப் பறிமுதல் செய்ய முடியும் என்றும், அத்துடன் அங்கு போர் குற்றங்கள் நடந்திருக்கின்றன என்பதற்கு இது ஒரு சான்றாகவும் மாறும்," என்றும் புரூஸ் ஃபெயின் கூறினார்.


மூலம்[தொகு]