உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை இலக்கியவிழாவில் கலந்து கொள்ள பாமுக், தேசாய் மறுப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சனவரி 22, 2011

இலங்கையின் காலி நகரில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் இலக்கிய விழாவில் புகழ்பெற்ற இரு புதின எழுத்தாளர்களான துருக்கியைச் சேர்ந்த நோபல் பரிசாளர் ஓரான் பாமுக், இந்தியர் கிரண் தேசாய் ஆகியோர் தாம் கலந்துகொள்ளப் போவதில்லை என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.


ஓரான் பாமுக்
கிரண் தேசாய்

இவர்கள் இருவரும் தற்போது ஜெய்ப்பூரில் நடைபெறும் இலக்கிய விழாவில் கலந்து கொண்டுவிட்டுப் பின்னர் அடுத்தவாரம் இலங்கை செல்லவிருந்ததாகத் தெரிகிறது.


இலங்கையில் நடக்கும் இந்த இலக்கிய விழாவை எழுத்தாளர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் இதில் கலந்துகொண்டால், அது பேச்சுச் சுதந்திரத்தை ஒடுக்கும் விதமாக இலங்கை அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவது போல் ஆகிவிடும் எனப் புகழ்பெற்ற எழுத்தாளர்களான நோம் சோம்ஸ்கி, அருந்ததி ராய், கென் லோச் உட்படப் பல எழுத்தாளர்கள் முன்னதாகக் கோரிக்கை விடுத்திருந்தனர்.


ஓரான் பாமுக், கிரண் தேசாய் ஆகியோர் இலங்கையில் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பின்னர் மீண்டும் இந்தியா திரும்புவதற்கு இந்திய குடிவரவு அதிகாரிகள் விதிக்கும் நிபந்தனைகள் காரணமாக தாங்கள் இலக்கிய விழாவில் கலந்துகொள்ள இயலாமல் போயுள்ளதாய் இந்த எழுத்தாளர்கள் மின்னஞ்சல் மூலம் தமக்குத் தெரியப்படுத்தியுள்ளதாக காலி இலக்கிய விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


"இந்த அரசாங்கத்தின் கீழ் இலங்கை ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக இயங்க முடியாத சூழ்நிலையில் அங்கு இவ்விழா நடத்தப்படுவது வருத்தத்துக்குரியது” என எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு கருத்துத் தெரிவித்துள்ளது.


கடந்த பத்தாண்டுகளில் குறைந்தது 17 ஊடகவியலாளர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளனர் என மனித உரிமைக் குழுக்கள் தெரிவிக்கின்றன.


இதற்கிடையில், இலங்கை இலக்கிய விழாவில் கிரண் தேசாயும் ஓரான் பாமுக்கும் கலந்துகொள்ளாமைக்கும், தமது வீசா நடைமுறைகளுக்கும் எவ்வித தொடர்புமில்லையென இந்தியா தெரிவித்துள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இஸ்தான்புல் இந்தியத் தூதரகம் பாமுக்கிற்கு பலமுறை இந்தியா சென்று திரும்புவதற்கு ஏதுவாக வீசா வழங்கியுள்ளதாக கொழும்பு இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.


மூலம்

[தொகு]