உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை உதவி நிறுவனங்கள் சோர்வடைந்து விட்டன, ஐநா எச்சரிக்கை

விக்கிசெய்தி இலிருந்து

புதன், மே 19, 2010

இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களுக்கு அவசியமாகத் தேவைப்படும் மனிதாபிமான உதவிகள் இதுவரையில் 24 விழுக்காடே கிடைத்துள்ளதாகவும், உதவி வழங்கும் நாடுகள், மற்றும் அமைப்புகள் இது விடயத்தில் சோர்வடைந்து விட்டதாகவும் ஐக்கிய நாடுகள் எச்சரித்திருக்கிறது.


ஈழப்போர் முடிவடைந்து ஓராண்டு கழிந்து விட்ட நிலையில், மீளக்க்குடியேற விரும்பும் தமிழ் மக்களின் தேவைகள் இன்னமும் அதிகமாகவே உள்ளன என ஐநாவின் அறிக்கை தெரிவிக்கிறது.


2004 ஆழிப்பேரலை அனர்த்தத்தின் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்டிருந்த தேவைகளிலும் பார்க்க ஈழப்போரின் பின்னர் ஏற்பட்டிருக்கும் மனிதாபிமான தேவைகள் மிகவும் அதிகமானவை என ஐ.நா. வின் மூத்த அதிகாரியொருவர் ராய்ட்டர் செய்திச் சேவைக்குக் கூறியுள்ளார்.


கடந்த ஆண்டு மே 18 இல் போர் முடிவுக்கு வந்தத அடுத்து சுமார் மூன்று இலட்சம் மக்கள் தமது வீடுகளிலிருந்து இடம்பெயர்ந்தனர். பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் திரும்பிச் சென்றிருக்கின்றபோதும் அழிக்கப்பட்ட வீடுகளையும் வயல்களில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கின்ற அவலமான நிலைமையையுமே அவர்கள் காணமுடிகிறது.


இதேவேளை, இந்த மக்களின் வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கு மனிதாபிமான சமூகம் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. போதிய நிதி வசதிகள் இல்லாமையால் இந்த இக்கட்டான நிலைமை தோன்றியுள்ளது. உதவி வழங்குவோரிடம் இருந்து நிதி வசதிகள் மோசமான முறையில் பற்றாக்குறையாகக் காணப்படுகின்றது. உடனடியாக சர்வதேச சமூகம் உதவி வழங்க முன்வராவிடில், எதிர்வரும் ஜூனுடன் நாங்கள் பணமில்லாத நிலையை எதிர்நோக்க நேரிடுமென்று இலங்கையிலுள்ள ஐ.நா.வின் மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் நீல்புனே கூறியுள்ளார்.


இதற்கிடையில், முன்னர் கூறப்பட்டவையிலும் பார்க்க பொதுமக்கள் இழப்பு இன்னும் அதிகமாக இடம்பெற்றிருக்கிறது என்ற போர் வல்லுநர்களின் கூற்றுக்கு இதுவரை அரசு ஏதும் மறுமொழி கூறவில்லை.


போர் முடிந்த ஓராண்டு இராணுவக் கொண்டாட்டங்களை சீரற்ற காலைநிலையைக் காரணம் காட்டி இலங்கை அரசு ஒத்தி வைத்திருக்கிறது. இக்கொண்டாட்டங்கள் அடுத்த வாரம் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இலங்கையில் 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான மோதல் காலப்பகுதியில் இடம்பெற்ற நிகழ்வுகள் குறித்து ஆராய்வதற்கான போர்க்கால படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்களை இலங்கை ஜனாதிபதி நியமித்துள்ளார். எட்டு உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஆணைக்குழு 2010 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி முதல் 6 மாதங்களுக்குள் தனது பரிந்துரைகளை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்குமாறு பணிக்கப்பட்டிருக்கிறது.

மூலம்[தொகு]