இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2011: மூன்றாம் கட்டத் தேர்தல் ஆரம்பம்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, அக்டோபர் 8, 2011

இலங்கையில் தேர்தல்கள் நடைபெறாத மீதமுள்ள 23 உள்ளூராட்சி சபைகளுக்கான வாக்களிப்பு இன்று சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற இருக்கிறது.


கொழும்பு, தெகிவளை - கல்கிசை, சிறி ஜெயவர்தனபுர கோட்டை, மொரட்டுவை, நீர்கொழும்பு, கம்பகா, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, கல்முனை, அனுராதபுரம், பதுளை, இரத்தினபுரி, குருநாகல் ஆகிய 17 மாநகரசபைக்கும், கொலன்னாவ நகர சபைக்கும், கொட்டிகாவத்தை - முல்லேரியா, குண்டசாலை, கங்கவட்ட கோரளை, அம்பாந்தோட்டை - சூரியவெவ ஆகிய 5 பிரதேசசபைகளுக்கும் தேர்தல்கள் நடைபெறுகின்றன.


2010 ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பு படி நடைபெற இருக்கும் இத்தேர்தலில் 1,589,622 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த 23 உள்ளூராட்சி சபைகளுக்கும் 420 பேர் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படவுள்ளனர். 26 அரசியல் கட்சிகளும், 104 சுயேச்சைக் குழுக்களும் சார்பாக 5,488 பேர் போட்டியிடுகின்றனர். இன்று நள்ளிரவுக்கு முன்னர் முதலாவது முடிவு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பெரிதும் எதிர்பார்க்கப்படும் கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஆளும் கட்சிக் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட தலைமையிலான அணியும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஏஜேஎம் முசம்மில் தலைமையிலான அணியும் போட்டியிடுகின்றன. தமிழ் கட்சியான மனோ கணேசன் தலைமையிலான சனநாயக மக்கள் முன்னணி இன்னொரு அணியாக போட்டியிடுகின்றது. இக்கட்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறது.


கட்டம் கட்டமாக நடத்தப்படும் தேர்தல்களில் அரசு தனது முழுப்பலத்தையும் பிரயோகித்து தேர்தல் பிரசாரங்களிலும் ஏனைய அரசியல் பணிகளிலும் ஈடுபட்டுவருகிறது என ஆரம்பத்திலிருந்தே குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது. கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அப்பிரதேச நபர் உயிரிழந்துள்ளார்.


நாட்டில் 335 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. இவற்றில் கடந்த மார்ச் 17 ஆம் நாள் முதற்கட்டமாக 245 உள்ளூராட்சி சபைகளுக்கும், இரண்டாம் கட்டமாக சூலை 23 இல் 65 உள்ளூராட்சி சபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டன. இன்றைய 23 உள்ளூராட்சி சபைகளுக்கும் வாக்களிப்பு முடிவுற்றதும் இரண்டு உள்ளூராட்சி சபைகள் மாத்திரமே தேர்தல் நடத்துவதற்கு எஞ்சியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துரைப்பற்று ஆகிய இரு உள்ளூராட்சி சபை பிரதேசங்களிலும் கண்ணிவெடி அகற்றும் பணிகள் பூர்த்தியடையாததால் தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மூலம்[தொகு]