இலங்கை ஊடகவியலாளருக்கு ஒருமைப்பாட்டுக்கான பன்னாட்டு விருது

விக்கிசெய்தி இலிருந்து

சனி, நவம்பர் 13, 2010

"ஒருமைப்பாட்டுக்கான" பன்னாட்டு விருது இலங்கையின் ஊடகவியலாளர் பொத்தல ஜயந்தா, உருசிய வழக்கறிஞர் செர்கே மாக்னித்ஸ்கி, காபொனைச் சேர்ந்த ஆர்வலர் கிரெகரி மின்ஸ்டா ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழல்களுக்கு எதிரான கண்காணிப்புக் குழு "டிரான்ஸ்பேரன்சி இண்டர்நசனல்" (Transparency International) என்ற அமைப்பு இவ்விருதுகளை அறிவித்துள்ளது.


பொத்தல ஜெயந்தா “இலங்கையில் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்” என அவ்வமைப்பு புகழாரம் சூட்டியுள்ளது. மாஸ்கோவைச் சேர்ந்த வழக்கறிஞர் செர்கே மாக்னித்ஸ்கி "ஒருமைப்பாட்டுக்குக் குரல் கொடுத்ததன் மூலம் தனது உயிரைக் கொடுத்தவர்", எனக் கூறியுள்ளது.


பொத்தல ஜெயந்தா கடந்த ஆண்டு வரை ”இலங்கையில் பணியாற்றும் ஊடகவியலாளர் சங்கத்தின்” பொதுச் செயலராக இருந்தவர். ஊடக சுதந்திரத்துக்காகக் குரல் கொடுத்து வந்தவர். ஆட்சியாளருக்கு எதிரானவராக இவர் அரசு ஆதரவாளர்களினால் பார்க்கப்பட்டவர்.


கடந்த 2009 சூன் மாதத்தில் இலங்கையின் தலைநகர் கொழும்பில் உள்ள அவரது இல்லத்துக்கு அருகில் இனந்தெரியாதோரினால் தாக்குதலுக்கிலக்காகி பலத்த காயத்துக்குள்ளானார். தற்போது ஐக்கிய அமெரிக்காவில் வசித்து வருகிறார்.


"அரசு ஊடகங்களில் பணியாற்றும் போதே ஊழலுக்கு எதிராகவும், ஊடக விடுதலைக்காகவும் குரல் கொடுத்தது எனக்கு மகிழ்ச்சியே," என அவர் பிபிசி சிங்கள சேவைக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.


சுதந்திர ஊடகவியலாளர்களுக்கு இலங்கை இன்னும் பயங்கரமான நாடாகவே இருந்து வருகிறது என எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு கூறி வருகிறது.


மூலம்[தொகு]