இலங்கை குறித்த பிரேரணையை ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா சமர்ப்பித்தது

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

வியாழன், மார்ச் 8, 2012

ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான தீர்மானத்தின் வரைவை அமெரிக்கா சமர்ப்பித்துள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு அமெரிக்கா இலங்கைக்கு ஓராண்டு காலம் அவகாசம் கொடுத்துள்ளது. இவ்வரைபின் நகல்களை 47 உறுப்பு நாடுகளுக்கும் அமெரிக்கா வழங்கியுள்ளது.


இந்த வரைபு தொடர்பாக ஒரு உப மாநாட்டை இன்று வியாழக்கிழமை நடத்துவதற்கும் அமெரிக்கா ஒழுங்கு செய்துள்ளது.


இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புடைமையையும் ஊக்குவித்தல் எனும் தலைப்பிலான இத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:


ஐ.நா. சாசனம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிரபஞ்ச பிரகடனம், மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைகள், மற்றும் சம்பந்தப்பட்ட சாதனங்கள் ஆகியவற்றின் வழிகாட்டலின்படி, பயங்கரவாதத்துடன் போரிடுவதற்கு நாடுகள் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையும் சர்வதேச சட்டங்கள் குறிப்பாக சர்வதேச மனித உரிமைகள், அகதிகள், மனிதாபிமானச் சட்டங்களின் கீழ் அந்நாடுகள் கொண்டுள்ள கடப்பாடுகளுக்கு அமைவாக இருக்க வேண்டும் என்பதை மீள வலியுறுத்துகிறது.


இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் அது கண்டறிந்தவை, சிபாரிசுகள் என்பவற்றை கருத்திற்கொள்வதுடன் இலங்கையின் நல்லிணக்க செயன்முறைக்கு அதன் சாதகமான பங்களிப்பையும் ஏற்றுக்கொள்கிறது.


நீதிக்குப் புறம்பான கொலைகள், வலிந்து காணாமல்போகச் செய்தல், வடக்கு இராணுவ மயமாதலை நீக்கல், பாரபட்சமற்ற காணி பிணக்கு தீர்மான பொறிமுறைகளை அமுல்படுதுதல், தடுத்துவைப்பு கொள்கையை மீளாய்வு செய்தல், சுயாதீனமான சிவில் நிறுவனங்களை வலிமைப்படுத்தல், மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்தல் உள்ளடங்கிய அரசியல் தீர்வை அடைதல், அனைவருக்குமான கருத்துச் சுதந்திரத்தை பாதுகாத்தல், சட்டத்தின் ஆட்சிக்கான சீர்திருத்தங்களை மேற்கொள்ளல் உட்பட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் ஆக்கபூர்வமான சிபாரிசுகளை ஆக்கபூர்வமான சிபாரிசுகளை வரவேற்ற்றுள்ளது.


கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையானது சர்வதேச சட்டங்களின் மீறல்கள் குறித்த தீவிரமான குற்றச்சாட்டுகளை போதுமானளவு ஆராயவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் ஆக்கபூர்வமான சிபாரிசுகளை அமுல்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை கோருவதுடன் தொடர்புடைய சட்டக் கடப்பாடுகளை நிறைவேற்ற தேவையான மேலதிக நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அனைத்து இலங்கையர்களுக்கும் நீதி, சமத்துவம், பொறுப்புடைமை, மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான நம்பகமான, சுயாதீன நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு உறுதி பூணுமாறும் கோருகிறது.


கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் சிபாரிசுகளை அமுல்படுத்துவதற்கும் இடம்பெற்றதாக கூறப்படும் சர்வதேச சட்ட மீறல்களை ஆராயவும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகளை விபரிக்கும் முழுமையான செயற்திட்டமொன்றை இயன்றவரை விரைவாக சமர்ப்பிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை கோருகிறது.


மேற்படி நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்கான ஆலோசனைகள், தொழில்நுட்ப உதவிகளை மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரின் அலுவலகம் மற்றும் சம்மந்தப்பட்ட விசேட தொடர்புடைய நடைமுறைகள் வழங்குவதையும் அவற்றை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதையும் ஊக்குவிக்கிறது. அத்துடன் அத்தகைய உதவி வழங்கல் குறித்து 22ஆவது கூட்டத்தொடரில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தை கோருகிறது.' என அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மூலம்[தொகு]