இலங்கை தெற்கு, மேற்கு மாகாணசபைகளுக்கான தேர்தல் வேட்பு மனுக்கள் சன. 30 இல் ஏற்றுக்கொள்ளப்படும்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சனவரி 17, 2014

இலங்கையில் மேற்கு மற்றும் தெற்கு மாகாணசபைத் தேர்தல்களுக்கு வேட்பு மனுக்கள் இம்மாதம் 30 முதல் பெப்ரவரி 6 நண்பகல் 12.00 மணி வரை ஏற்கப்படும் என இலங்கைத் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.


இலங்கையில் ஒன்பது மாகாணசபைகளுக்கும் கட்டம் கட்டமாகத் தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் படி, தெற்கு, மேற்கு மாகாண சபைகள், அம்மாகாண ஆளுனர்களின் வேண்டுகோளின் படி இம்மாதம் 12ம் திகதி நள்ளிரவுடன் கலைக்கப்பட்டன.


1988 ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபை சட்டத்தின் 10 (1) பிரிவிற்கமைய தேர்தல் ஆணையாளர் இம்மாகாணங்களுக்கான வேட்பு மனு ஏற்கும் திகதியை நேற்று அறிவித்தார். மார்ச் மாத இறுதியில் 22 அல்லது 29 ஆம் திகதியில் தேர்தல் நடைபெறும் என தேர்தல் செயலக வட்டாரங்கள் கூறின.


மேல் மாகாணத்தில் 4,014,230 பேரும், தென் மாகாணத்தில் 2,140,498 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 2013 வாக்காளர் பதிவில் இருந்தே இவர்கள் தேர்தெடுக்கப்பட்டனர்.


தென் மாகாண சபைக்கு தேர்தல் மூலம் 53 பேரும், இரு கூடுதல் இடங்களுடன் மொத்தம் 55 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். மேல் மாகாண சபைக்கு தேர்தல் மூலம் 102 பேரும், இரு கூடுதல் இடங்களுடன் மொத்தம் 104 பேர் தெரிவு செய்யப்படுவர்.


ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) உட்பட முக்கிய கட்சிகள் களத்தில் இறங்கவுள்ளன.


மூலம்[தொகு]