உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை தேர்தல் வன்முறையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட நால்வர் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, அக்டோபர் 8, 2011

இலங்கையில் 23 உள்ளூராட்சி சபைகளுக்காக வாக்களிப்பு நடைபெற்ற இன்று கொழும்பின் புறநகர்ப் பகுதியான கொலன்னாவ கொட்டிக்காவத்த பிரதேசத்தில் இருகுழுக்களுக்கிடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்சுமன் பிரேமச்சந்திர உட்பட நால்வர் உயிரிழந்துள்ளார். ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா படுகாயமடைந்துள்ளார்.


உயிரிழந்த பிரேமச்சந்திர இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சவின் ஆலோசகராகப் பணியாற்றி வருகின்றார். அவரது மெய்ப்பாதுகாவலவரும் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார். காயமடைந்த துமிந்த சில்வா ஸ்ரீஜயவர்தனபுர மருத்துவமனையில் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இச்சம்பவத்தில் மேலும் பத்து பேர் காயமடைந்துள்ளதாக கஃபே அமைப்பு தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தின்போது காயமடைந்த பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உள்ளூராட்சி தேர்தல் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இதுவரை தேர்தல் வன்முறை சம்பவங்கள் 24 பதிவுசெய்யப்பட்டுள்ளதாக வாக்களிப்பு நிலையங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ பால மெதவத்த தெரிவித்துள்ளார்.


இதே பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அப்பிரதேச நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


முல்லேரியா காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிவரை அமுலில் இருக்கும் என காவல்துறைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.


மூலம்

[தொகு]