இலங்கை நாட்டுப்பண் விவகாரம் மீண்டும் உருவெடுத்தது

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

வியாழன், திசம்பர் 30, 2010

யாழ்ப்பாணத்தில் பள்ளிச் சிறுவர்களைக் கொண்டு சிங்கள மொழியில் நாட்டுப்பண் பாடப்பட்ட சம்பவத்தை இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் பலரும் கண்டித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்ர்கள் பெர்ம்பான்மையாக வாழும் வடக்குப் பகுதியில் சிங்களத்தில் நாட்டுப்பண்ணைப் பாடச்சொல்லி வற்புறுத்துவது சட்டத்துக்குப் புறம்பானது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.


சிறீ லங்கா தாயே என்னும் இலங்கையின் தேசியப் பண்ணின் தமிழ் வடிவத்தை இரத்துச் செய்ய இலங்கையின் அமைச்சரவை இம்மாத ஆரம்பத்தில் முடிவு செய்தது. இலங்கையின் தேசியப் பண் சிங்கள மொழியில் மட்டுமே பாடப்பட வேண்டும் எனவும் அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது. ஆனாலும், அப்படியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் டக்ளசு தேவானந்தா பிபிசி தமிழோசைக்குத் தெரிவித்திருந்தார். அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச இரண்டு மொழிப் பாடல்களையும் பாடுவதற்கு அனுமதி அளித்திருந்ததாகவும், இது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதாயினும், எவ்வித இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலை அழிவின் ஞாபகார்த்த நிகழ்வு கடந்த திசம்பர் 26 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் பிரதமர் டி. எம். ஜெயரத்தின தலைமையில் இடம்பெற்றிருந்தது. அப்போது யாழ்ப்பாணப் பாடசாலை ஒன்றின் மாணவிகள் வலுக்கட்டாயமாக நாட்டுப்பண்ணை சிங்களத்தில் பாடும்படி வற்புறுத்தப்பட்டுப் பாடவைக்கப்பட்டனர் என அங்கிருந்து வரும் தகால்கள் தெரிவிக்கின்றன.


"தமிழிலேயே முதலில் பாடுவதற்கு முடிவு செய்யப்பட்டது என்றும், பின்னர் உயர் அதிகாரத்தில் இருந்தவர்களின் உத்தரவினால் அவசர அவசரமாக சில மாணவர்களுக்கு சிங்களத்தில் பாடுவதற்குப் பயிற்சி அளிகக்ப்பட்டுப் பாடவைக்கப்பட்டனர்," என டெய்லிமிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.


அரசாங்க அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா இது பற்றித் தெரிவிக்கையில், இலங்கை அரசுத்தலைவர்கள் பங்குபற்றும் நிகழ்வுகளில் சிங்களத்தில் நாட்டுப்பண் இசைப்பது ஒரு புதுமையான நிகழ்வல்ல என வாதாடினார். ஆனாலும் ஏனைய தமிழ் அரசியல்வாதிகள் இதனை எதிர்க்கின்றனர்.


"இப்பிரச்சினை குறித்து இலங்கை அரசு உடனடிக் கவனம் எடுக்க வேண்டும்," என நாடாளுமன்ற உறுப்பினர் எம். சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.


தமிழ் வடிவம் குறிப்பாக இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் பாடப்பட்டு வடுகிறது. சிங்களப் பாடலில் அதே இசையமைப்பிலும் மொழிபெயர்ப்புடனும் தமிழ் வடிவம் இலங்கை விடுதலை அடைந்த காலத்தில் இருந்து பாடப்பட்டு வருகிறது. பண்டிதர் ம. நல்லதம்பி என்பவர் இதனை 1950 ஆம் ஆண்டில் மொழிபெயர்த்தார்.


இதற்கிடையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்ப்பாணப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு இலங்கைப் படையினரின் திட்டமிட்ட செயலே காரணம் என யாழ்ப்பாண ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவரது இறுதிக் கிரியைகள் அவரது ஊரான இளவாலையில் செவ்வாய் அன்று இடம்பெற்றது. யாழ் மாவட்டத்தில் இருந்து பெரும் தொகையான பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இலங்கை அரசுச் செயலக அதிகாரிகளோ அல்லது யாழ்நகர மேயரோ இந்நிகழ்வ்ல் கலந்து கொள்ளவில்லையென தமிழ்நெட் செய்தி வெளியிட்டுள்ளது. இவர் சுட்டுக் கொல்லப்பட்ட நாளன்றே இலங்கைப் பிரதமர் பங்குபற்றிய நிகழ்வில் சிங்களத்தில் நாட்டுப்பண் இசைக்கப்பட்டது.


அறிக்கையின்படி பிரதி கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கம், கடந்த 26ஆம் திகதி 2004இல் இடம்பெற்ற சுனாமியை நினைவுபடுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் அனுட்டிக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில் தேசிய கீதம் சிங்களத்தில் பாடப்பட வேண்டுமென்று கூறிய சுற்று நிருபத்தை பகிரங்கமாக விமர்சித்தமை காரணமாகவே சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற குற்றச்சாட்டை உரிமைகளுக்கான வலைய மைப்பு விடுத்துள்ளது. இக்குற்றச்சாட்டை இலங்கை அரசு மறுத்துள்ளது.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]

Bookmark-new.svg