இலங்கை படுகொலை 'சனல் 4' ஒளிநாடா உண்மை - ஐநா கருத்து

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

வியாழன், ஜனவரி 7, 2010


இலங்கை படையினர் சட்ட விரோதமாக கொலைகளில் ஈடுபடுவதாகக் காட்டும் ஐக்கிய இராச்சியத்தின் 'சனல் 4' ஒளிநாடாக் காட்சிகள், உண்மையென உறுத்திப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மூத்த அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.


சித்திரவதை மற்றும் சட்ட விரோத கொலைகள் குறித்த ஐநா மன்ற சிறப்பு அதிகாரி பிலிப் ஆல்ஸ்டன் மூன்று பக்கசார்பற்ற வல்லுநர்கள், இந்த ஒளிநாடா உண்மையானதுதான் என்று உறுதிப்படுத்தியுள்ளார்கள் என்றும், எனவே இது குறித்து ஒரு விசாரணை வேண்டும் என்றும் மீண்டும் கோரியுள்ளார்.


கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஜனநாயகத்துக்கான இலங்கை பத்திரிகையாளர்கள் என்கிற ஒரு அமைப்பு அனுப்பிய அந்த ஒளிநாடாவில், அரச படையினர் போல தோற்றம் அளிப்பவர்கள், நிர்வாணமாக்கப்பட்ட நிராயுதபாணிகள் சிலரை சுட்டுக் கொல்வது போன்ற காட்சிகள் காணப்பட்டன.


இந்த ஒளிநாடா போலியானது, திரிபுபடுத்தப்பட்டது என்று இலங்கை அரசு தொடர்ந்து கூறிவந்துள்ளது.


இதற்கிடையில், பிலிப் ஆல்ஸ்டனின் அறிக்கை பொது ஊடகங்களுக்குச் செல்லும் முன்னர் இலங்கை அரசிடம் முறையாகக் கையளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது குறித்து இலங்கை அரசின் கடும் கண்டனத்தை அவர் தெரிவித்தார்.

மூலம்[தொகு]