இலங்கை வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் 63 புதிய நீதிமன்றங்கள்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, ஏப்பிரல் 23, 2011

இலங்கையில் போர் மோதல்கள் இடம்பெற்ற வடக்கு கிழக்குப் பகுதிகளில் நீதி பரிபாலனத்தை மேம்படுத்துவதற்கு 63 இடங்களில் புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அங்கு தமிழ் தெரிந்த நீதிபதிகள் நியமிக்கப்படவுள்ளதாகவும் நீதி அமைச்சர் ரவூப் அக்கீம் தெரிவித்துள்ளார். மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களின் நீதிமன்றங்களைப் பார்வையிடுவதற்கும், அவற்றின் செயற்பாடுகள் பற்றி அறிவதற்குமாக இரண்டு நாள் அதிகாரபூர்வப் பயணமாக அவர் இந்தப் பகுதிகளுக்கு வருகை தந்திருந்திருந்த போதே இதனைத் தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்: 'அக்சஸ் டூ ஜஸ்டிஸ்' என்ற திட்டத்தின் கீழ் செருமனி நாட்டின் நிதியுதவியோடு மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களில் அழிந்துள்ள நீதிமன்றக் கட்டிடங்களைப் புதிதாக திருத்தியமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். இலகுவில் நீதியை நிலைநாட்டுவதற்கான வழிமுறையைப் பொதுமக்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதற்கான ஒரு முயற்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இந்த நீதிமன்றங்களில் பணியாற்றுவதற்கான தமிழ் பேசும் சட்டத்தரணிகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக அவர் தெரிவித்தார். பிரதான நகர நீதிமன்றங்களில் பணியாற்றுகின்ற தமிழ்பேசும் சட்டத்தரணிகள் இந்தப் பிரதேசங்களில் பணியாற்ற முன்வருமாறு அவர் அழைப்பு விடுத்திருக்கின்றார்.


கடந்த 1996 ஆம் ஆண்டிற்கும் 2000 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் முடிக்கப்படாமல் குவிந்துள்ள வழக்குகளை மாகாணங்களில் இயங்கி வருகின்ற சிவில் மேன்முறையீட்டு மன்றங்களின் ஊடாக விசாரணை செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் தவிர மாவட்ட நீதிமன்றங்களில் பல வருடக்கணக்காகத் தேங்கிக்கிடக்கின்ற வழக்குகளை விரைவில் முடிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். பிரஸ்தாப விடயம் குறித்து நீதிச் சேவை ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருப்பதாகவும் அமைச்சர் ஹக்கீம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்[தொகு]