உள்ளடக்கத்துக்குச் செல்

ஈராக்கின் மோசுல் நகரில் 1,800 ஆண்டுகள் பழமையான கிறித்தவக் கோவில் தீயிடப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சூலை 21, 2014

ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரான மோசுலில் அமைந்துள்ள 1,800 ஆண்டுகள் பழமையான கிறித்தவக் கோவில் ஒன்றை இசுலாமிய தேசப் போராளிகள் தீக்கிரையாக்கினர்.


இசுலாமியப் போராளிகள் கடந்த மாதம் மோசுல் நகரைக் கைப்பற்றியதை அடுத்து அங்குள்ள கிறித்தவர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். சூலை 9 இல் வெளியிடப்பட்ட ஒரு யூடியூப் காணொளியில் விவிலியக் காலக் கல்லறை ஒன்று சேதமாக்கப்படுவது காண்பிக்கப்பட்டது.


முன்னதாக, மோசுல் நகரில் உள்ள கிறித்தவர்கள் அனைவரும் இசுலாமிய மதத்திற்கு மாற வேண்டும், அல்லது அவர்கள் வரி செலுத்த வேண்டும், மீறினால் கொல்லப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை வரை அவர்களுக்குக் காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து பெருமளவு கிறித்தவர்கள் வெள்ளியன்றே அங்கிருந்து வெளியேறி விட்டனர். இவர்கள் குர்திஸ்தானின் டோகுக், ஆர்பில் நகர்களை நோக்கிச் செல்வதாக ஏஎஃப்பி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


மோசுல் நகரில் உள்ள கிபி 4ம் நூற்றாண்டு பழமையான ஒரு கிறித்தவ மதப்பள்ளி ஒன்றைக் கைப்பற்றிய இசுலாமியர்கள் அங்கிருந்த மதகுருமாரை வெளியேற்றியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


2003 ஆம் ஆண்டில் முன்னாள் தலைவர் சதாம் உசைன் பதவியில் இருந்து அகற்றப்படும் வரை ஈராக்கில் ஏறத்தாழ ஒரு மில்லியன் கிறித்தவர்கள் வாழ்ந்து வந்தனர். அதன் பின்னர் இசுலாமியப் போராளிகளினால் இவர்கள் ஆங்காங்கே தாக்குதல்கலுக்கு உள்ளாகியதை அடுத்து பலர் நாட்டை விட்டு வெளியேறினர். தற்போது ஈராக்கில் 450,000 கிறித்தவர்கள் வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.


மூலம்[தொகு]