உள்ளடக்கத்துக்குச் செல்

சுணி இசுலாமியப் போராளிகள் இரு நாட்களில் ஈராக்கின் நான்கு நகரங்களைக் கைப்பற்றினர்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சூன் 22, 2014

ஈடாக்கின் மேற்கு அன்பார் மாகாணத்தில் மேலும் ஒரு நகரை சுணி இசுலாமியப் போராளிகள் கைப்பற்றினர். கடந்த இரு நாட்களில் அவர்கள் கைப்பற்றிய நான்காவது நகரம் இதுவாகும்.


இராக்கிய இஸ்லாமிய தேசம் மற்றும் லெவெண்டு என்ற சுணி இசுலாமிய அமைப்பின் போராளிகள் ஜோர்தான் எல்லையில் இருந்து 150 கிமீ தூரத்தில் உள்ள ரூத்பா நகரைக் கைப்பற்றினர். இந்நகர் ஜோர்தானையும், பக்தாதையும் இணைக்கும் தரைவழிப் பாதையில் அமைந்துள்ள மிக முக்கியமான நகரங்களில் ஒன்றாகும்.


முன்னதாக பாக்தாத் நகரை நோக்கிய தமது முன்னகர்வின் போது சிரிய எல்லையில் கையிம் என்ற நகரையும், மேற்கு ஈராக்கில் ராவா, அனா ஆகிய இரு நகரங்களையும் கைப்பற்றியிருந்தனர். கையின் நகரில் இடம்பெற்ற தாக்குதல்களில் 30 ஈராக்கிய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். சுணி மக்கள் பெரும்பான்மையாக வாழும் அன்பார் மாகாணத்தின் முழுப் பகுதியையும் அத்துடன் ஈராக்கியத் தலைநகரையும் கைப்பற்றுவதே கிளர்ச்சியாளர்களின் முக்கிய நோக்கம் என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இம்மாத ஆரம்பத்தில் ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மோசுல் சுணி போராளிகளின் வசம் வீழ்ந்தது. அன்றில் இருந்து அவர்கள் ஈராக்கின் பல பகுதிகளையும் கைப்பற்றி வருகின்றனர்.


கிளர்ச்சியாளர்களை அடக்க ஈராக்கிய அரசு அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஐக்கிய நாடுகளின் உதவியைக் கேட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டில் தனது படைகளை ஈராக்கில் இருந்து திரும்ப அழைத்த அமெரிக்கா தற்போது 300 இராணுவ ஆலோசகர்களை ஈராக்கிற்கு அனுப்பியுள்ளது.


ஈராக்கியப் பிரதமர் நௌரி மாலிக்கி சியா இசுலாமியர்களின் நலன்களையே கவனித்து வருவதாகவும், சுணி முஸ்லிம்களை அவர் உதாசீனப்படுத்துவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.


மூலம்[தொகு]