உள்ளடக்கத்துக்குச் செல்

ஈரான் பள்ளிவாசல் தற்கொலைத் தாக்குதலில் 22 பேர் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சூலை 16, 2010

தென்கிழக்கு ஈரானில் சியா பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற இரண்டு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 160 பேர் காயமுற்றனர்.


ஈரானில் சிஸ்டான் பலுச்சிஸ்தான் மாகாணம்

சிஸ்டான் பலுச்சிஸ்தான் மாகாணத் தலைநகரான சாகிடான் என்ற நகரில் ஜாமியா பள்ளிவாசல் ஒன்றின் வெளியே அமைந்திருந்த காவல் அரணின் முன்னால் முதலாவது தற்கொலைதாரி தனது குண்டை வெடிக்க வைத்தார். சிறிது நேரத்தில் இன்னும் ஒரு குண்டு வெடிக்கவைக்கப்படடது.


தொழுகைக்காக வந்திருந்தோரும், புரட்சிப் படையினரும் இத்தாக்குதலின் போது கொல்லப்பட்டவரில் அடங்குகின்றனர்.


ஜுண்டுல்லா என்ற சுணி தீவிரவாதக் குழு இத்தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளதாக உள்ளூர் செய்திச்சேவை தெரிவிக்கிறது. கடந்த ஜூன் மாதத்தில் தமது குழுவின் தலைவரைத் தூக்கிலிட்டதற்குப் பழி வாங்கவே இத்தாக்குதலை நடத்தியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


முகமது நபியின் பேரனான இமாம் உசேனின் பிறந்த நாளைக் கூடியிருந்த மக்கள் மீதே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.


முதலாவது தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு உதவ முன் வந்தோரே இரண்டாவது தாக்குதலில் கொல்லப்பட்டதாக மாகாண ஆளுநர் தெரிவித்தார்.


அமெரிக்க அரசுச் செயலர் இலறி கிளிண்டன் இத்தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளார். "அண்மையில் உகாண்டா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், போன்ற நாடுகளில் இடம்பெற்ற தாக்குதல்களும், இன்றைய ஈரான் தாக்குதலும் பயங்கரவாத இயக்கங்களுக்கெதிராக உலக நாடுகள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றன," என்றார் இலறி கிளிண்டன்.

தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]