உக்ரைனின் முன்னாள் அரசுத்தலைவர் மீது கொலைக் குற்றச்சாட்டு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், மார்ச்சு 23, 2011

2000 ஆம் ஆண்டில் புலனாய்வு ஊடகவியலாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக உக்ரைனின் முன்னாள் அரசுத்தலைவர் லியொனிட் குச்மா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார். தான் நிரபராதி என நிரூபிப்பதற்கு எங்கு செல்லவும் தயார் என அவர் கூறியுள்ளார்.


படுகொலை செய்யப்பட்ட கியோர்கி கொங்காத்சே
உக்ரைனின் முன்னாள் அரசுத்தலைவர் லியோனிட் குச்மா

குச்மா அரசுத்தலைவராக இருந்தபோது அவரை விமரிசித்து வந்த கியோர்கி கொங்காத்சே 2000 ஆம் ஆண்டு செப்டம்பரில் கடத்தப்பட்டார். சில மாதங்களின் பின்னர் இவரது தலையில்லாத உடல் காடொன்றில் கிடக்கக் கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவத்தை அடுத்து அரசைக் கண்டித்து நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.


1994 முதல் 2005 வரை ஆட்சியில் இருந்த குச்மா தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி குச்மாவைப் படுகொலை செய்வதற்கு உட்துறை அமைச்சுக்கு உத்தரவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர் தற்போது நாட்டை விட்டு வெளியேறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


உக்ரைன்ஸ்கா பிராவ்தா (உக்ரைனிய உண்மை) என்ற இணையத்தளத்தை நடத்தி வந்த கொங்காத்சே குச்மாவின் அரசு ஊழல்களை தனது இணையத்தளம் மூலமாக வெளிப்படுத்தி வந்துள்ளார்.


குச்மாவின் அலுவலகத்தில் அவரது பாதுகாவலர்களால் இரகசியமாகப் பதிவு செய்யப்பட்ட ஒலிநாடாக்கள் தம்மிடம் உள்ளதாகவும் அதில் கொங்காத்சே கொலையில் குச்மாவின் பங்கு குறித்த ஆதாரங்கள் உள்ளன என்றும் எதிர்க்கட்சிகள் கூறியிருந்தன. கொங்காத்சே செச்சினியர்களால் கடத்தப்பட்டதாக அவ்வொலிநாடாவில் தகவல்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஒலிநாடா ஒரு முக்கிய ஆதாரமாக அரசுத்தரப்பில் வைக்கப்பட்டுள்ளது.


2009 ஆம் ஆண்டில், உட்துறை அமைச்சைச் அதிகாரியான ஒலெக்சி புக்காச் என்பவர் இக்கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்டார். தானே கொங்காத்சேயை கழுத்தை நெரித்துக் கொன்றதாகவும் பின்னர் தலையைக் கொய்து எறிந்ததாகவும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இக்கொலையில் சம்பந்தப்பட்ட மேலும் மூவர் சிறை வைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் உட்துறை அமைச்சர் யூரி கிராவ்ச்சென்கோ இப்படுகொலையைச் செய்ய உத்தரவிட்டதாக அரசுத்தரப்பில் கூறப்பட்டது. இவர் தற்போது இறந்து விட்டார். இவர் 2005 ஆம் ஆண்டில் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.


மூலம்[தொகு]