உக்ரைனின் முன்னாள் பிரதமர் திமொசென்கோவுக்கு ஏழாண்டுகள் சிறை

விக்கிசெய்தி இலிருந்து

புதன், அக்டோபர் 12, 2011

உக்ரைனின் முன்னாள் பிரதமர் யூலியா திமொசென்கோ பதவியில் இருந்த போது 2009 ஆம் ஆண்டில் உருசியாவுடன் கையொப்பமிட்ட இயற்கை எரிவளி இறக்குமதி உடன்பாட்டில் ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு ஏழாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.


யூலியா திமொசென்கோ

இச்சிறைத்தண்டனை குறித்து அமெரிக்கா உட்பட பல மேற்குலக நாடுகள் தமது கண்டனங்களை உக்ரைனிய அரசுக்குத் தெரிவித்துள்ளன. இது அரசியல் நோக்குடையது என அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன தெரிவித்துள்ளன. இவ்வுடன்பாட்டில் கையெழுத்திட்ட உருசியப் பிரதமர் விளாதிமிர் பூட்டின், நீதிமன்றத்தின் தீர்ப்பு தனக்கு விளங்கவில்லை எனத் தெரிவித்தார்.


உக்ரைனின் அரசு எரிபொருள் நிறுவனம் நாஃப்டோகாஸ், உருசியாவின் காஸ்புரொம் ஆகியவற்றுடனான இந்த உடன்பாட்டை பேரம் பேசும்போது தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


2010, மே 10 முதல் இவர் மீது பல வழக்குகள் போடப்பட்டன. சனவரி 2009ஆம் ஆண்டில் உருசியாவுடன் கையொப்பமிட்ட உடன்பாட்டில் ஊழல் குறித்து நடந்து வந்த வழக்கில் நீதிமன்ற விதிகளைப் பலமுறை மீறியதாக ஆகத்து 5, 2011 அன்று இவர் கைது செய்யப்பட்டார். இது குறித்த தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டது. ஏழாண்டுகள் சிறைத்தண்டனையும் மூன்றாண்டுகளுக்கு அரசியலில் ஈடுபடத் தடையும் விதிக்கப்பட்டது. அத்துடன் 1.5 பில்லியன் ஹிரிவ்நாசு ($186மில்) அரசுக்கு நட்டஈடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.


உருசியாவின் எரிவாயு குழாய்கள் மூலமாக உக்ரைன் ஊடாக மேற்குலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால் இரு முன்னாள் சோவியத் குடியரசுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக முறுகல் நிலை நீடித்து வருகிறது.


திமொசென்கோ அரசியலில் வருவதற்கு முன்னர் பொருளியல் மற்றும் கல்வித்துறையில் செயலாற்றி வந்தார். அரசியலில் நுழைவதற்கு முன்னரே எரிவளி தொழிலில் ஈடுபட்டு பெரும் பணம் ஈட்டியுள்ளார். நாட்டின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவராக விளங்கினார். 2004ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2005 ஆம் ஆண்டு சனவரி வரை நடந்த செம்மஞ்சள் புரட்சிக்குத் தலைமையேற்று உக்ரைனின் முதல் பெண் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2010ஆம் ஆண்டின் குடியரசுத் தலைவர் தேர்தலில், விக்டர் யானுகோவைச்சிடம் தோல்வியுற்றார். முதலில் தேர்தல் முடிவுகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக தோல்வியை ஏற்க மறுத்த திமொசென்கோ, 2010 பெப்ரவரி 20 அன்று "நீதிமன்றத்தில் உண்மை வெளிப்படாது" என்று கூறி தமது முறையீட்டை மீளப் பெற்றுக்கொண்டார்.


மூலம்[தொகு]