உக்ரைனில் பயணிகள் விமானம் தரையில் மோதியதில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், பெப்பிரவரி 14, 2013

உக்ரைனின் கிழக்கே தனியெத்ஸ்க் பன்னாட்டு விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்று நேற்றுத் தரையிறங்குகையில் மோதி இரண்டாகப் பிளந்து தீப்பற்றியதில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனராயினும், பெரும்பாலான பயணிகள் தாமாகவே விமானத்தை விட்டு வெளியேறியதாக விமானநிலையப் பேச்சாளர் கூறினார்.


ஒடேசாவில் இருந்து தனியெத்ஸ்கிற்கு காற்பந்தாட்ட இரசிகர்களை ஏற்றி வந்த அண்டோனொவ் ஆன்-24 ரக விமானமே விபத்துக்குள்ளாகியது. விமானத்தில் 45 பேர் இருந்ததாகவும், 39 பேர் உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஒருவரைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. விமானம் ஓடுபாதையில் இருந்து 700 மீட்டர்கள் தொலைவில் வயல் பகுதி ஒன்றில் தரையிறங்கி மூன்று பகுதிகளாக சிதறியது.


விபத்துக்கான காரணங்களை அறிய உக்ரைன் பிரதமர் மிக்கோலா அசாரொன் உத்தரவிட்டுள்ளார். இறந்தவர்களில் ஒடேசாவின் பல அரசு அதிகாரிகளும் அடங்குவர்.


அண்மைக் காலங்களில் ஆன்-24 விமானங்கள் சில விபத்துக்குள்ளாகியுள்ளன. 2010-2011 காலப்பகுதியில் நான்கு விபத்துகளில் 18 பேர் கொல்லப்பட்டனர்.


மூலம்[தொகு]