உக்ரைன்: அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடருகிறது, பலர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், பெப்பிரவரி 20, 2014

உக்ரைனில் நேற்று அறிவிக்கப்பட்ட போர்நிறுத்த உடன்பாடு முறிவடைந்ததை அடுத்து காவல்துறையினருடன் இடம்பெற்ற மோதலில் குறைந்தது 17 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர் என அதிகாரபூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.


தலைநகர் கீவில் சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற பெரும் ஆர்ப்பட்டத்தின் போது துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றதாகவும், பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டதாகவும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஹோட்டல் உக்ரைனில் கொல்லப்பட்ட ஐவரின் உடல்களைத் தாம் கண்டதாக பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


இந்த ஆர்ப்பாட்ட இயக்கம் யூரோமைதான் என அழைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் அரசுத்தலைவர் யானுக்கோவிச் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உடன்பாட்டை இரத்துச் செய்து உருசியாவுடன் கூட்டுச் சேர எடுத்த முடிவை எதிர்க்கும் முகமாக யூரோமைதான் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.


ஐரோப்பியத்தின் ஒன்றிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கும், அரசுத்தலைவர் விக்டர் யானுக்கோவிச்சுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. செருமனி, போலந்து, பிரான்சு ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கீவ் நகரில் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளனர்.


உக்ரைனுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளைக் கொண்டு வருவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் யோசித்து வருவதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.


இதற்கிடையில், உருசியாவின் சோச்சி நகரில் இடம்பெற்றுவரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கச் சென்றிருந்த 45 உக்ரைனியர்களில் அரைவாசிப்பேர் போட்டிகளில் கலந்து கொள்ளாமல் நாடு திரும்பியுள்ளனர். தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியே தற்போது இடம்பெற்று வரும் வன்முறைகள் என உருசியா கருத்துத் தெரிவித்துள்ளது.


மூலம்[தொகு]