உள்ளடக்கத்துக்குச் செல்

உக்ரைன்: கிரிமியாவை உருசியப் படைகள் கைப்பற்றின

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, மார்ச்சு 2, 2014

உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமியா தன்னாட்சிக் குடியரசை உருசியப் படைகள் சனிக்கிழமை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். உக்ரைனில் கடந்த வாரம் இடம்பெற்ற ஐரோப்பிய சார்பு ஆட்சி மாற்றத்தை அடுத்து அங்கு இராணுவத் தலையீட்டுக்கு உருசிய நாடாளுமன்றம் அரசுத்தலைவர் விளாதிமிர் பூட்டினுக்கு முழுமையான அதிகாரம் வழங்கியுள்ளது.


கிரிமியா தன்னாட்சிக் குடியரசு

உருசியப் படையினரின் இராணுவ வாகனங்கள் அரசுக் கட்டடங்களைச் சுற்றி வளைத்துள்ளதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். பன்னாட்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. தொடர்பூடகங்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டுள்ளன.


இதற்கிடையில், உக்ரைனுக்குள் உருசியா படைகளை அனுப்பியது பன்னாட்டு சட்டங்களை மீறிய செயல் என அமெரிக்கத் தலைவர் பராக் ஒபாமா உருசியத் தலைவருக்குத் தெரிவித்துள்ளார். 90 நிமிடங்கள் வரை இன்று தொலைபேசியில் உரையாடிய ஒபாமா, கிரிமியாவில் இருந்து படைகளைத் திரும்ப அழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். ஆனாலும், தமது நலனையும், உக்ரைனில் உள்ள உருசியர்களின் நலனையும் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு மாஸ்கோவிற்கு உள்ளதாக பூட்டின் பதிலளித்துள்ளார்.


உக்ரைன் தனது பாதுகாப்புப் படையினரை உசாரில் வைத்திருப்பதாக அறிவித்துள்ளது. அணுவாற்றல் நிலையங்கள் உட்பட முக்கிய இடங்களுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக உக்ரைனின் அரசுத்தலைவர் அலெக்சாந்தர் துர்ச்சீனொவ் கூறியுள்ளார்.


கிரிமியாவில் தற்போது 6,000 கூடுதல் உருசியப் படையினரும், 30 கூடுதல் கனரக வாகனங்களும் நிலை கொண்டுள்ளதாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் ஈகர் தெனியூக் கூறினார்.


கிரிமியாவில் இவ்வாரம் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உருசிய-சார்பு தலைவர் சேர்கி அக்சியோனொவ், கிரிமியாவில் அமைதியை நிலைநாட்ட மேலதிக உதவிகளை உருசியாவிடம் கோரியுள்ளதாகத் தெரிவித்தார். அக்சியோனொவின் அரசை உக்ரைனிய நடுவண் அரசு அங்கீகரிக்கவில்லை. பிராந்திய நாடாளுமன்றத்தின் அவசரகாலக் கூட்டத்தில் இடம்பெற்ற அக்சோனொவின் தேர்வு சட்டவிரோதமானது என உக்ரைன் அறிவித்துள்ளது.


மூலம்[தொகு]