உக்ரைன் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் விக்டர் யனுக்கோவிச் முன்னணியில்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், பெப்பிரவரி 9, 2010


உக்ரைனில் ஞாயிற்றுக்கிழமை நடந்த அரசுத் தலைவர் தேர்தலில் தற்போதைய எதிர்கட்சித் தலைவரான விக்டர் யனுக்கோவிச், பிரதமர் திருமதி யூலியா திமோசென்கோவை விட மிகச்சிறு வாக்கு வித்தியாசத்தில் வெற்றியடைந்து கொண்டிருக்கிறார் என்று உக்ரைனின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


அங்கு மக்களாட்சி சிறப்பாகப் புலனாகியது என்று அனைத்துலக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


மக்களின் தீர்ப்பை மதித்து, அதிகாரத்தை முறைப்படி கையளிக்க உக்ரைனியத் தலைவர்கள் தயாராக வேண்டும் என்று ஐரோப்பிய பாதுகாப்பு கூட்டுறவுக்கான அமைப்பு கேட்டுள்ளது. ஆனாலும் பிரதமர் திமொசென்கோ தேர்தல் முடிவுகளை அங்கீகரிக்கவில்லை.


அந்த அமைப்பின் தலைவரான ஜோஸ் சோயரஸ் கருத்து வெளியிடும் போது உக்ரையினின் தேர்தல் ஆணையம் ஒளிவு மறைவின்றி பாரபட்சமற்ற முறையில் செயற்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.


99% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் யனுக்கோவிச் 48.83% வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார். தொமொசென்கோ 45.59% வாக்குகள் பெற்றுள்ளார்.


விக்டர் யனுக்கோவிச் ரஷ்ய சார்புடையவர் என்று கருதப்படுகிறது.

மூலம்