உலகக்கிண்ணப் போட்டிகளை அடுத்து இலங்கை துடுப்பாட்ட வீரர்களுக்கு சம்பள நிலுவை

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஞாயிறு, திசம்பர் 4, 2011

இலங்கைத் துடுப்பாட்ட வீரர்களுக்கு இன்னும் கொடுக்கப்படாதுள்ள சம்பளக் கொடுப்பனவுகள் விவகாரம் தொடர்பில் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச துடுப்பாட்டப் பேரவை ஐசிசி கூறியுள்ளது.


கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்த உலகக் கிண்ணத் துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடிய இலங்கை அணியின் வீரர்களுக்கு இன்னும் போட்டிகளுக்கான கட்டணங்கள், உடன்படிக்கைத் தொகைகள் வழங்கப்படவில்லை என்றும் உலகக்கிண்ணப் போட்டிகளை நடத்திய பின்னர், கடுமையான நிதி நெருக்கடியை இலங்கை துடுப்பாட்ட வாரியம் எதிர் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, இலங்கைத் துடுப்பாட்ட வாரியத்தின் ஊழியர்களுக்கும் கடந்த சில மாதங்களாக சம்பளம் கொடுபடவில்லையென்று உள்ளூர் ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.


இதேவேளை, இது தொடர்பிலான ஆலோசனை உதவிகளுக்காக இலங்கைத் துடுப்பாட்ட வீரர்கள் சங்கம் தம்முடன் தொடர்பு கொண்டுள்ளதாக சர்வதேச துடுப்பாட்ட சங்கங்களின் சம்மேளனமான எஃப்ஐசிஏ தெரிவித்துள்ளது. இலங்கை துடுப்பாட்ட வீரர்களின் சங்கத்திற்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகவும், தற்காலிக தீர்வு குறித்து ஆராய்வதற்காக என்பதற்காக ஐசிசியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகவும் சர்வதேச துடுப்பாட்ட சங்கங்களின் சம்மேளனத்தின் மூத்த நிறைவேற்று அதிகாரி டிம் மே பிபிசியிடம் கூறியிருந்தார். பிரச்சனை விரைவில் தீர்க்கப்படாவிட்டால் விளையாடுவதை நிறுத்துவது தான் வீரர்களுக்கு உள்ள ஒரே தெரிவு என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அவ்வாறான நிலமை ஏற்படாது என்று தான் நம்புவதாகவும் கூறினார்.


அதே நேரம் இலங்கை தேசிய துடுப்பாட்ட வீரர்களுக்கு வழங்கப்படவுள்ள சம்பள நிலுவைகள் எதிர்வரும் டிசம்பர் 15ம் திகதிக்கு முன் வழங்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே அறிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க டிசம்பர் 1ம் திகதி நாடாளுமன்றில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளளார். இலங்கை துடுப்பாட்ட நிறுவனத்திற்கு சர்வதேச துடுப்பாட்டப் பேரவையில் இருந்து 4.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப்பெறவுள்ளதாகவும் அதன்மூலம் சம்பள நிலுவைகளை வழங்க முடியும் எனவும் மகிந்தானந்த அலுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.


மூலம்[தொகு]

Bookmark-new.svg