உள்ளடக்கத்துக்குச் செல்

ஊழல் புகாரில் சிக்கிய செருமானிய அதிபர் கிறிஸ்டியன் உல்ப் பதவி விலகினார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, பெப்பிரவரி 18, 2012

ஊழல் புகாரில் சிக்கிய செருமனி அதிபர் கிறிஸ்டியன் உல்ப் நேற்றுத் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தலைநகர் பெர்லினில் உள்ள பெல்லிவியு மாளிகைக்கு மனைவி பெட்டினாவுடன் வந்த அதிபர், தனது பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்டார். கடந்த 2010ம் ஆண்டு சூன் 30ம் தேதி ஜெர்மனியின் புதிய அதிபராக 'கிறித்தவ சனநாயக ஒன்றியம்' கட்சியைச் சேர்ந்த உல்ப் பதவியேற்றார். இவர் 2003 முதல் 2010 வரை கீழ் சக்சோனி மாநிலத்தின் பிரதம அமைச்சராக இருந்தார். இக்காலத்தில் வாங்கிய வீட்டுக் கடன் தொடர்பான விடயத்திலேயே உல்ப்பின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


பதவி விலகிய அதிபர் கிறிஸ்டியன் ஊல்ஃப்

"நாட்டின் பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒருவர்தான் இந்த பதவியில் நீடிக்க வேண்டும். ஆனால் அந்த நம்பிக்கையை நான் இழந்து விட்டேன். எனவே, இன்று அதிபர் பதவியிலிருந்து விலகுகிறேன். நான் தவறு செய்துவிட்டேன். ஆனால் எப்போதும் நான் நேர்மையானவன்" என உல்ப் தெரிவித்தார். இரண்டாம் உலகப்போருக்குப் பின் பதவியிலிருக்கும்போதே குற்றவியல் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் அதிபர் உல்ப்தான். செருமனியில் சனாதிபதி பதவி பெரும்பாலும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததல்ல.


இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கிய ஒரு வீட்டிற்கு ஏதோ ஒரு வகையில் வந்த பணம் தான் இவரது பதவி விலகலுக்குக் காரணமாக ஆனது. தொடர்ந்து இவரது விடுமுறைப் பயணங்களில் இவர் தேர்ந்தெடுக்கும் விலையுயர்ந்த உல்லாசச் செலவுகள். இப்படி கடந்த 2 மாதமாக உள்ளூர் ஊடகங்கள் இவர் ஊழல் செய்து விட்டதாக சர்ச்சையைக் கிளப்பின.


அதிபரின் பதவிவிலகல் அரசுத்தலைவர் அங்கெலா மேர்க்கெலுக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய அடியாக அரசியல் வட்டாரத்தில் கணிக்கப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த மெர்க்கெல், "அதிபரின் பதவி விலகலை மரியாதையுடனும், அதேசமயத்தில் வருத்தத்துடனும்" ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்தார்.


அனைத்து அரசியல் கட்சிகளாலும் கருத்தொற்றுமை அடிப்படையில் ஏற்கக்கூடிய நபரை அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுப்பதற்கான முயற்சியில் மெர்க்கெல் ஈடுபட்டுள்ளார். அதுவரை, 'கிறித்தவ சனநாயக ஒன்றியக் கட்சி'யைச் சேர்ந்த ஓர்ஸ்ட் சீஹோஃபர் தற்காலிக அதிபராக பதவி வகிப்பார் எனத் தெரியவருகின்றது.


மூலம்

[தொகு]