உள்ளடக்கத்துக்குச் செல்

எட்வர்ட் மண்ச்சின் 'அலறல்' ஓவியம் 120 மில்லியன் டாலர்களுக்கு ஏலத்தில் விற்பனை

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மே 3, 2012

நோர்வேயின் குணச்சித்திர ஓவியரான எட்வர்ட் மண்ச் வரைந்த "அலறல்" (The Scream) என்ற புகழ் பெற்ற ஓவியம் 119.9 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு நேற்று புதன்கிழமை அன்று ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. இது வரை விற்கப்பட்ட ஓவியங்களில் இதுவே அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டதாகும்.


எட்வர்ட் மண்ச், 1921

1895 ஆம் ஆண்டைச் சேர்ந்த இந்த ஓவியம் சோதபி என்ற நியூயோர்க் ஏலவிற்பனைக் கூடத்தில் அநாமதேய நபர் ஒருவரினால் வாங்கப்பட்டது. $40 மில்லியன்களில் இருந்து ஏலம் ஆரம்பித்து 12 நிமிடங்களில் விற்கப்பட்டது. இந்த விற்பனை மூலம் கிடைக்கப்பெற்ற நிதியைக் கொண்டு நோர்வேயில் புதிய அருங்காட்சியகம், உணவகம், கலைக்கூடம் ஆகியன அமைக்கப்படும்.


எட்வர்ட் மண்ச்சின் அலறல் என்ற ஓவியத்தின் நான்கு மூலப் பிரதிகளில் இந்த ஓவியம் மட்டுமே இதுவரையில் தனியார் ஒருவர் உரிமையாளராயிருந்தார். பீட்டர் ஓல்சென் என்பவர் இதனை விற்பனை செய்தார். இவரது தந்தை ஓவியர் மண்ச்சிற்கு நண்பராயிருந்தவர். இரண்டு ஓவியங்கள் 1994 இலும் 2004 இலும் திருடப்பட்டு பின்னர் மீட்கப்பட்டன.


இதற்கு முன்னர் ஏலவிற்பனையில் சாதனை படைத்தது பிக்காசோவின் நியூட் என்ற ஓவியம் ஆகும். இது 2010 ஆம் ஆண்டில் 106.9 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டது.


மூலம்

[தொகு]